சட்டத்தை மீறியதாகப் புகார் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

E commerce companies get notice for not displaying country of origin

சட்டத்தை மீறியதாகக் கூறப்பட்ட புகார் தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்பட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அமேசான் பிளிப்கார்ட் உட்பட இ காமர்ஸ் நிறுவனங்கள் தற்போது பண்டிகைக்காகத் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. இந்த நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சாதாரண ஸ்பூனில் தொடங்கி டிவி, பிரிட்ஜ் உள்பட அனைத்து பொருட்களுக்கும் அதிரடியாக விலை குறைப்பு செய்துள்ளன. சில குறிப்பிட்ட வகை செல்போன், லேப்டாப், உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் பாதி விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

டிவி, பத்திரிகை உட்பட அனைத்து மீடியாக்களிலும் இந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் தான் தினமும் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இந்த இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் விற்கும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விவரத்தையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. செப்டம்பர் 30க்குள் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அமேசான், பிளிப்கார்ட் உள்ள எந்த இ காமர்ஸ் நிறுவனங்களும் இந்த உத்தரவைக் கடைப்பிடிக்க வில்லை எனத் தெரியவந்தது.

இதையடுத்து அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு செயலாளர் பிரவீன் கன்டேல்வால் இதுகுறித்து மத்திய அரசிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், மத்திய அரசின் உத்தரவை மீறி இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. எனவே அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு முதல்முறை 25 ஆயிரம் ரூபாயும், மீண்டும் அதே தவறை செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

You'r reading சட்டத்தை மீறியதாகப் புகார் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழக அரசு நடத்தும் நீட் பயிற்சி மையங்களில் ஒருவர் கூட தேர்ச்சியில்லை.. காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்