யானை மிதித்து கல்லூரி பேராசிரியை பலி சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்

சுற்றுலா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த கல்லூரி பேராசிரியை காட்டு யானை மிதித்து பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் வயநாடு அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்குள்ள இயற்கை எழிலை ரசிப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும் சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. வனப் பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை ரசிப்பதற்காகவும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த சஹானா சத்தார் (26) என்பவர் தன்னுடைய 2 உறவினர்களுடன் வயநாடு மாவட்டம் மேப்பாடி எளம்பிலேறி என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதிக்கு சென்றார்.

இவர் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உளவியல் துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். இந்த சுற்றுலா விடுதி அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளது. அது இரவில் வன விலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதியாகும். வனவிலங்குகளை இரவில் ரசிப்பதற்காக அந்த சுற்றுலா விடுதி சார்பில் டெண்டுகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். அங்கு சுற்றுலா பயணிகள் தங்குவது உண்டு. இதுபோன்ற ஒரு டெண்டில் தான் சஹானா சத்தாரும், அவரது உறவினர்களும் தங்கியிருந்தனர். நேற்று இரவு சாப்பிடுவதற்காக சஹானா சத்தார் வெளியே வந்தார். அப்போது அங்கு ஒரு காட்டு யானை ஒன்று வந்தது. இரவு நேரம் என்பதால் யானையை அவர் கவனிக்கவில்லை.

திடீரென அந்த யானை பிளிறியபடியே அவரை விரட்டியது. அப்போது சஹானா தடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த யானை சஹானாவை காலால் மிதித்தது. சத்தத்தைக் கேட்ட அவருடன் வந்த உறவினர்கள் சஹானாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் யானை அவர்களையும் விரட்டியதால் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து விடுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று சஹானாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். யானை மிதித்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்பகுதி தாசில்தாருக்கு வயநாடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading யானை மிதித்து கல்லூரி பேராசிரியை பலி சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னைத்தவிர யாருடனும் பரிவர்தனை செய்தால் நான் பொறுப்பல்ல.. பிரபல இசை அமைப்பாளர் வக்கீல் நோட்டீஸ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்