உடலும் உடலும் சேர்ந்தால் தான் பலாத்கார குற்றம் ஆகும் நாக்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உடலும், உடலும் சேராமல் ஆடையின் மேல் கை வைத்தால் அது பலாத்கார குற்றம் ஆகாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. நாக்பூரை சேர்ந்த 39 வயதான வாலிபர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்த உத்தரவில் நாக்பூர் உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. நாக்பூரைச் சேர்ந்தவர் சதீஷ் (39). இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை கொய்யாப்பழம் தருவதாக தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், சதீஷ் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை உறுதி செய்து அவருக்கு 3 வருடம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சதீஷ் மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதில் அவர் கூறியிருந்தது: நான் அந்த சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை. என்னுடைய வீட்டில் வைத்து அவரது உடலில் தொட மட்டுமே செய்தேன். ஆடைகளை எதுவும் கழட்டவில்லை. எனவே இதை பலாத்கார குற்றமாக கருத முடியாது. இதனால் என் மீது போக்சோ பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சதீஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் கூறியது: உடலும் உடலும் சேராமல் ஒரு பெண்ணின் மார்பகத்தை தொடுவது பலாத்கார குற்றமாக கருத முடியாது. போக்சோ சட்டத்தின்படி உடல் பாகங்கள் ஒன்றுடன் ஒன்று சேராமல் பெண்ணின் மார்பகத்தில் தொடுவதை பலாத்கார குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு சம்பவத்தை போக்சோ பிரிவின் கீழ் பலாத்கார குற்றமாக கருத வேண்டும் என்றால் உடலும் உடலும் சேர்ந்த பாலியல் தொடர்பு இருக்க வேண்டும். சிறுமியின் ஆடையின் மேல் கையால் தொடுவதை பலாத்கார குற்றமாக கருத முடியாது. ஆடையை கழட்டாமல் தான் அந்த நபர் சிறுமியை தொட்டுள்ளார். எனவே அதற்காக போக்சோ பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. அதற்கு பதிலாக அந்த சிறுமியை அவமானப்படுத்தியதின் பேரில் 354 பிரிவின் படி அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

You'r reading உடலும் உடலும் சேர்ந்தால் தான் பலாத்கார குற்றம் ஆகும் நாக்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை பலாத்கார வழக்கு முன்னாள் முதல்வர், பாஜக, காங். தலைவர்களுக்கு எதிராக சிபிஐ விசாரிக்க உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்