விவாகரத்தான நடிகையை மணக்கிறார் இங்கிலாந்து இளவரசர்

நடிகையை மணக்கிறார் இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேஹன் மார்க்கல் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி வின்சர் கோட்டையில் நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவுக்கு பிறந்த இரண்டாவது மகனான ஹாரிக்கு தற்பொழுது 33 வயது ஆகிறது. இவர், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க நடிகையான மேஹன் மார்க்கிலை காதலித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இவர்களின் திருமண தேதி வெளியிடப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு மே 19-ல் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது 36 வயதாகும் மேஹன் மார்க்கல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஆகஸ்ட்4, 1981-ஆம் ஆண்டு பிறந்தார். தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சியில் முழுநேர நடிகையாக சுழன்று வருகிறார். அவருக்கு ஏற்கெனவே திரேவர் ஏங்கல்சன் (trevor engelson) என்பவருடன் 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, பின்னர் 2013-ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

அதனால் ஹாரி - மார்க்கில் திருமணத்திற்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல் அளிக்கமாட்டார் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவந்தார்கள்.இந்நிலையில், கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனையில் அவரை சந்தித்து திருமணத்திற்கு ஒப்புதல் பெற்றார். இது அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் மிகவும் குறிப்பிட்டத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது,

ஏனென்றால், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன மேஹன் மார்க்கலை இளவரசர் ஹாரி திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட விஷயம், இங்கிலாந்து அரச குடும்பம் ஏற்றுக்கொண்டு வரும் மாற்றங்களில் முக்கியமானது எனக் கருதப்படுகிறது. இந்தத் திருமணத்தில், ஹாரியின் மாப்பிள்ளைத் தோழனாக அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேஹன் மார்க்கல், இளவரசர் ஹாரியை திருமணம் செய்த பிறகு இங்கிலாந்து குடிமகளாக மாற உள்ளார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் பட்டத்துக்கான வரிசையில் ஹாரி, 5–வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்கு முன் மேஹன் மார்க்கலுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ராணி மற்றும் அவரது ராஜ பரம்பரையினருடன் இணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட மேஹன் மார்க்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திருமணத்துக்கான பணிகள், இசை நிகழ்ச்சி, பூக்கள், வரவேற்பு விழா ஆகியவற்றுக்கு இப்போதே பணம் கொடுத்து அரச குடும்பம் ஏற்பாடு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் பிரபல எஃப்ஏ கால்பந்து போட்டி தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே நாளில் இந்தத் திருமணம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading விவாகரத்தான நடிகையை மணக்கிறார் இங்கிலாந்து இளவரசர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ’ஆளுநர் ஆய்வை கைவிட வேண்டும்’ - திருமாவளவன் வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்