கல்வித்துறை செயலாளர்கள் திடீர் மாற்றம் ஏன்?

கல்வித்துறை செயலாளர்கள் திடீர் மாற்றம்

கல்வித்துறை செயலாளர்கள் சுனில் பாலிவால் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அதிரடியாக மாற்றப்பட்டதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளன.

உயர்கல்வித்துறை செயலாளராக சுனில் பாலிவால், இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், அதிரடியாக, தொழிலாளர் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். இதேபோல், பள்ளிக் கல்வித்துறையில் பாடத்திட்ட செயலாளராக பணியாற்றி வந்த உதயசந்திரன், தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டார்.

சுனில் பாலிவால் மாற்றத்திற்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. துணைவேந்தர் இல்லாத காலகட்டத்தில், நிர்வாகக் குழு தலைவராக இருந்து, அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் ஒப்புதல் அளித்தது சுனில் பாலிவால் தான்.

மேலும், திண்டிவனத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டு பணிக்கு அனுமதி வழங்கியதற்கு சுனில் பாலிவால் முக்கிய காரணமாக இருந்ததால், அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளராக இருந்து, பின் பாடத்திட்ட செயலாளராக மாற்றப்பட்ட உதயசந்திரன், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில் முககிய பங்கு வகித்தார். 12 ம் வகுப்பு உள்ளிட்ட பல வகுப்புகளுக்கான பாடத்திட்ட பணிகள் முடிவடையாத நிலையில், தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டிருப்பது, கல்வித்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவருடைய மாற்றத்திற்கு, பெரிதாக எந்த காரணமும் இல்லாத நிலையில், பாடத்திட்ட பணிகள் முடியும் வரையாவது பணியில் தொடர அரசு அனுமதித்திருக்கலாம் என்பது, கல்வித்துறை அதிகாரிகள் கருத்தாக இருக்கிறது.

You'r reading கல்வித்துறை செயலாளர்கள் திடீர் மாற்றம் ஏன்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்