ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா

Paramapada Gate Opening Ceremony at Srirangam Temple

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இந்த திருத்தலம் பூலோக வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.


வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக, நம்பெருமாள் கருவறையில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டு தங்க மரத்தை சுற்றி வந்து சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வந்தடைந்தார். காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டதும், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும், கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டபடி சென்றனர். பரமபதவாசலைக் கடந்த நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


இதே போல், சென்னையில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதே போல், தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.

You'r reading ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நள்ளிரவில் எய்ம்ஸ் சென்ற பிரியங்கா ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆறுதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்