விரட்டிய ரசிகர்.... போக்குக்காட்டிய தோனி - சிஎஸ்கே பயிற்சி போட்டியில் நடந்த சுவாரஸ்யம்

dhoni fun with fan during chennai super kings practice

கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகும் தோனி மீது இருக்கும் கிரேஸ் ரசிகர்களுக்குக் குறையாமல் இருந்து வருகிறது. அவர் களத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவரை ரசிகர்கள் கொண்டாடி கொண்டே இருக்கின்றனர். தோனியை பார்க்கும் ஆர்வ மிகுதியில் சிலர் அவ்வப்போது மைதானத்துக்குள் புகுந்துவிடுவார்கள். இந்த சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்தபோதுகூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அங்கு ரசிகர் ஒருவர் தோனியை நோக்கி ஓடிவர இதைப் பார்த்த தோனி, ரோஹித் ஷர்மா பின்னால் ஒளிந்துகொண்டார். இருந்தும் அந்த ரசிகர் விடாமல் துரத்தினார். தோனியும் ரசிகரை துரத்திவரும்படி அவருடன் விளையாடினார்.இந்தக் காட்சிகள் வைரலானது.

இதேபோன்று ஒரு சம்பவம் தற்போது சென்னையிலும் நடந்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் முதல் போட்டி சென்னையில் நடக்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னையில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயிற்சி ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், மைதானத்துக்குள் எந்த ரசிகர்களும் வந்துவிடாதபடி தீவிரமான பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பயிற்சி ஆட்டம் முடிந்த பின் அனைவரும் புறப்பட்டுச் செல்லும்போது பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்தார். தோனியைப் பார்க்கும் ஆவலில் அவரை நோக்கி ஓடினார். வருவதைப் பார்த்த தோனி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி பின்னால் ஒளிந்துகொண்டு, போக்கு காட்டிக்கொண்டே ஓடத் தொடங்கினார். அவரை ரசிகர் பின்தொடர்ந்து ஓடினார். இருப்பினும் தோனியை, அந்த ரசிகரால் பிடிக்க முடியவில்லை. அப்போது, ரசிகரைப் பாதுகாவலர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இருப்பினும், தன்னைக் காண வந்த ரசிகருடன் கைகுலுக்கி மகிழ்ந்த தோனி அவரை வழியனுப்பி வைத்தார். இந்தக் காட்சியை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

You'r reading விரட்டிய ரசிகர்.... போக்குக்காட்டிய தோனி - சிஎஸ்கே பயிற்சி போட்டியில் நடந்த சுவாரஸ்யம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கட்சி ஆரம்பித்த பின் முதல் தடவையாக திண்டுக்கல்லை அதிமுக கைகழுவியது ஏன்? - பரபர தகவல்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்