`தைரியமாக பந்து வீசாவிட்டால் இப்படி தான் ஆகும் - தொடர் தோல்வியின் விரக்தியில் குமுறும் விராட் கோலி

Virat Kohli said his bowlers paid for not showing enough bravery vs KKR

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வீரர்கள் பார்மில் இல்லாததால் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது. முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த அந்த அணி தனது ஐந்தாவது போட்டியில் நேற்று கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் கூடுதல் நம்பிக்கை, பலத்துடன் களம் கண்டது. பேட்டிங்கில் பல நாட்களுக்கு பிறகு கோலி - டிவில்லியர்ஸ் கூட்டணி மிரட்டியது. இருவரும் பார்த்து பார்த்து சேர்த்த ரன்களை கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் நான்கே ஓவர்களில் காலி செய்து பெங்களூரு அணியை இந்தப் போட்டியிலும் வெற்றிபெறாத வண்ணம் பார்த்துக்கொண்டார். இதனால் ஐந்தாவது தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது.

இதற்கிடையே போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி, ``நாங்கள் இந்தப் போட்டியில் தோல்வி அடைவோம் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடைசி நான்கு ஓவர்களில் நடந்தவைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்க வேண்டும். ஒரு வெற்றிகூட இல்லை என்பதால் மிகுந்த அழுத்தமாக உள்ளது. கடைசி கட்டங்களில் தைரியமாக பந்துவீசவில்லை என்றால் ரஸ்ஸல் போன்ற அதிரடி வீரர்களால் அது சிக்கலை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் நான் நிச்சசயமாக மகிழ்ச்சியாக இல்லை. நாங்கள் இன்னும் 25 ரன்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலில் இந்த ரன்கள் போதுமானதாக நினைத்தேன்.

ஆனால் இப்போது அதை நினைத்து பயனில்லை. கடைசி நான்கு ஓவர்களில் 75 ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், 100 ரன்களுக்கு மேல் உள்ளதை பௌலர்கள் எப்படி கட்டுப்படுத்த போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆட்டத்தில் என்ன தவறு நடந்துள்ளது என்பதை கலந்தாலோசிப்போம். அதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது. இப்போதைக்கு வீரர்களை சுதந்திரமாக விடுவித்து அடுத்த போட்டியில் இதைவிட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களை தயார்ப்படுத்த வேண்டும். இந்த சீசன் ஆரம்பித்தில் இருந்து இதுவரை ஏமாற்றமாகவே இருந்து வருகிறது. ஆனால் எங்களுக்கான வாய்ப்பு இன்னும் இருப்பதால் அதனை நோக்கி முன்னேறுவோம். எங்களை நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

You'r reading `தைரியமாக பந்து வீசாவிட்டால் இப்படி தான் ஆகும் - தொடர் தோல்வியின் விரக்தியில் குமுறும் விராட் கோலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `ஒன்றரை வருடமாக செக்ஸ் தொல்லை; ஆசைக்கு இணங்கினால் பதவி' - என்.டி.ஆரின் மனைவி மீது புகார் கொடுத்த நடிகர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்