உலகக் கோப்பை கிரிக்கெட் விடாது மிரட்டுது மழை... இந்தியா vs நியூசி.போட்டி சந்தேகம்

CWC:Heavy rain in nattingham, India vs New Zealand match is doubtful:

நாட்டிங்ஹாமில் நான்கு நாட்களாக விடாது பெய்யும் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான இன்றைய போட்டி நடப்பது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு மழை பெரும் எதிரியாகிவிட்டது. இதனால் போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளுக்கு புள்ளிப் பட்டியலில் பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது இதுவரை 3 போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டிங்காமில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே இன்று நடைபெறும் போட்டியும் மழையால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நாட்டிங்காமில் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்கிறது.நேற்று சிறிது நேரம் மழை ஒய்ந்திருந்த போது இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் மழை மிரட்ட பயிற்சியை கைவிட வேண்டியதாகி விட்டது. நேற்று மாலை தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இதனால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்தாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இன்றைய போட்டி இந்தியாவுக்கு 3வது போட்டியாகும். ஏற்கனவே தெ.ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று நியூசிலாந்தும் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவாக உள்ளது. ஆசிய அணிகளான இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை எளிதில் வீழ்த்திய நியூசிலாந்து, இன்றும் பலம் வாய்ந்த மற்றொரு ஆசிய அணியான இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.

மழை கருணை காட்டி ஆட்டம் நடைபெற்றால் போட்டி இரு அணிகளுக்குமே சவாலானதாக அமையும் என்பது நிச்சயம். மழையால் ரத்தானால், வெற்றி தோல்வி என்பதில் இருந்து தப்பித்து ஆளுக்கொரு புள்ளியுடன் சமாதானமாக வேண்டியதுதான். மழை பகவான் கருணை காட்டுவாரா ? போட்டி நடைபெறுமா? என்பது மாலை 3 மணிக்குத் தெரிந்துவிடும்.

You'r reading உலகக் கோப்பை கிரிக்கெட் விடாது மிரட்டுது மழை... இந்தியா vs நியூசி.போட்டி சந்தேகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பார் கவுன்சில் முதல் பெண் தலைவர் வரவேற்பு விழாவில் சுட்டுக் கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்