கண்ணாமூச்சி காட்டிய மழை... இந்தியா Vs நியூசிலாந்து போட்டி ரத்து

CWC, India vs New Zealand match abandoned with out toss due to rain:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமலே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப் பட்டது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே போட்டி நடைபெற இருந்தது.போட்டி நடக்கவிருந்த நாட்டிங்காமில் கடந்த 4 நாட்களாகவே தொடர் மழை பெய்து வந்ததால், இன்றைய போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே நிலவியது.

ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு மழை நின்றதால், இரு அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஓரளவு நம்பிக்கை பிறந்தது. நடுவர்களும் மைதானத்தை வலம் வந்து பார்வையிட்டனர். மைதானம் ஈரமாக இருந்ததால் அரை மணி நேரம் போட்டியை தள்ளி வைத்தனர்.சூரிய பகவான் கண் திறக்காததால் மைதானத்தில் ஈரம் காயவில்லை. இதனால் அடுத்து இரு தடவை மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டி தொடங்கும் நேரத்தை தள்ளிப் போட்டு வந்தனர்.

மைதானம் ஓரளவுக்கு தயாரானபோது, திடீரென வருண பகவான் மீண்டும் இடையூறு காட்டத் தொடங்கினான். லேசான தூறல் ஆரம்பித்து, அடுத்து மீண்டும் கன மழை கொட்டத் தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை நின்றபாடில்லாமல் மழை சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் பெய்வதும் என கண்ணாமூச்சி காட்டியது.

இதனால் கடைசியில் இந்தப் போட்டி டாஸ் கூட போடப்படாமல், ஒரு பந்தும் வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்த இரு அணிகளில், நியூசிலாந்து ஆடிய முதல் 3 போட்டிகளிலும், இந்தியா ஆடியுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்றைய போட்டியிலும் இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வியின்றி ரத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் தான் மழையின் குறுக்கீடு மிக மோசமானதாக உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன் 1979-ல் ஒரு போட்டியும், 2015-ல் ஒரு போட்டியும் மட்டுமே மழையால் தடைப்பட்டது. இந்தத் தொடரில் இதுவரை நடந்த 18 போட்டிகளில் 4 போட்டிகள் மழையால் ரத்தாகி உள்ளது. இங்கிலாந்தில் வழக்கத்துக்கு மாறாக மழை கொட்டுவதால், இன்னும் எத்தனை போட்டிகள் மழையால் பாதிக்கப்படுமோ என்ற கவலை கிரிக்கெட் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது எனலாம்.

You'r reading கண்ணாமூச்சி காட்டிய மழை... இந்தியா Vs நியூசிலாந்து போட்டி ரத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடிக்கு வாழ்த்துக் கூறிய சீன அதிபர்..! இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது பற்றி பேச்சு..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்