ஜேசன் ராய் அதிரடியால் ஆஸி. பரிதாபம் உலக கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து தகுதி

CWC semifinal, England beat Australia by 8 wickets and enters to final

உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸி.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி .

அபாரமான பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவை 223 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இங்கிலாந்து அணி, ஜேசன் ராயின் அதிரடி ஆட்டத்தால் 32.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்தது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது.

இன்று பர்மிங்காமில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தது இங்கிலாந்து .ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே பிஞ்ச் டக் அவுட்டாகி வெளியேறினார்.

வோக்ஸ் வேகத்தில் வார்னர் (9),ஹேன்ட் ஸ்கோம்ப் (4) வெளியேற, 14 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது. அதன் பின் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த கேரி, ஓரளவு தாக்குப் பிடித்து ஆட, இந்த ஜோடி 103 ரன்கள் சேர்த்தது.கேரி 46 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். அணியின் சரிவை ஓரளவு மீட்ட ஸ்மித் 85 ரன்களில் ரன் அவுட்டாக, ஆஸி.

அணி49 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் அதில் ரஷீத், வோக்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராயும், பேர்ஸ்டோவும் அதிரடி காட்டினர். ஜேசன் ராய் ருத்ர தாண்டவவே ஆடினார் எனலாம். சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய ராய், 65 பந்துகளில் 85 ரன்களை மளமளவென சேர்த்தார்.

இதில்9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். பேர் ஸ்டோவ 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து மார்கன் (45), ரூட் (49) நிலைத்து நின்று அதிரடி காட்ட 32.1 ஓவரிலேயே வெற்றியை சுவைத்து இறுதிப்போட்டிக்கு கெத்தாக முன்னேறியது இங்கிலாந்து . வரும் 14-ந் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை முதன்முதலாக கைப்பற்ற நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது இங்கிலாந்து .

உலக கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தும், இங்கிலாந்தும் இதுவரை கோப்பை வென்றதில்லை. இதனால் இம்முறை இவ்விரு அணிகளில் ஒரு அணி கோப்பை வெல்வது உறுதியாகியுள்ளது.




You'r reading ஜேசன் ராய் அதிரடியால் ஆஸி. பரிதாபம் உலக கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து தகுதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலக கோப்பை அரையிறுதி; ஆஸி. 223 ரன்னுக்கு ஆல்அவுட்..! இங்கிலாந்து அபாரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்