தந்தை இறந்த 3வது நாள் அரைசதம் அடித்து மந்தீப் சிங் அஞ்சலி

தந்தை இறந்த 3வது நாளில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்து அதைத் தந்தைக்குக் காணிக்கையாக்கினார் பஞ்சாப் வீரர் மந்தீப் சிங். தந்தையின் இறுதிச் சடங்குக்குக் கூட செல்லாமல் அணிக்காக விளையாடிய அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள மந்தீப் சிங்குக்கு விளையாடுவதற்கு முதலில் அதிகமாக வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.

கடந்த 24ம் தேதி தான் அவருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தான் அவரது தந்தை ஹர்தேவ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். மரணம் குறித்து அறிந்த உடன் ஊருக்குச் செல்ல மந்தீப் சிங் தீர்மானித்திருந்தார்.

ஆனால், தான் கிரிக்கெட் விளையாடுவது தான் தனது தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என மந்தீப்புக்கு தெரியும். இதனால் தனது முடிவை மாற்றி விட்டு அணியுடன் தொடர அவர் முடிவு செய்தார். தந்தையின் இறுதிச் சடங்கில் அவரால் வீடியோ கால் மூலமாக மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது.தந்தை மரணம் அடைந்த மறுநாளே அவர் தனது அணிக்காகக் களம் இறங்கினார். மாயங்க் அகர்வாலுக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாகக் கடந்த 24 ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக மந்தீப் சிங் ஆடினார். அன்றைய போட்டியில் அவரால் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆனால் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்து 66 ரன்களுடன் அவர் ஆட்டமிழக்காமலிருந்தார். மந்தீப் சிங்கின் அபார ஆட்டமும் பஞ்சாப் அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அவர் அரை சதம் அடித்தவுடன் வானத்தை நோக்கிப் பார்த்து மரியாதை செலுத்தி தனது தந்தைக்கு அவர் காணிக்கையாக்கினார். போட்டி முடிந்தவுடன் அவரை சக வீரர்கள் கட்டிப்பிடித்துப் பாராட்டினர். போட்டிக்குப் பின்னர் அவர் கூறுகையில், ' இந்தப் போட்டி எனக்கு மிக முக்கியமான போட்டியாகும். விளையாடும் போது எந்தக் காரணம் கொண்டும் அவுட்டாக கூடாது என என்னுடைய தந்தை அடிக்கடி கூறுவார்.

எனது தந்தையின் விருப்பத்தை நான் இந்த போட்டியில் பூர்த்தி செய்துள்ளேன். இந்த போட்டியை எனது தந்தைக்கு நான் காணிக்கையாக்குகிறேன். நான் செஞ்சுரியோ, டபுள் செஞ்சுரியோ அடித்தால் கூட அதன் பின்னர் அவுட் ஆனால், எதற்காக நீ அவுட் ஆனாய் என்று என்னிடம் கேட்பார்' என்று மந்தீப் கூறினார். தந்தை இறந்த பின்னரும் கூட அணிக்காக விளையாடிய மந்தீப்பின் அர்ப்பணிப்பு உணர்வைக் குறித்துத் தான் சமூக இணையதளங்களில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

You'r reading தந்தை இறந்த 3வது நாள் அரைசதம் அடித்து மந்தீப் சிங் அஞ்சலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக்பாஸிடம் கதறி அழுத பெண் போட்டியாளர்.. என்ன நடந்தது..?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்