விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறல் இங்கிலாந்து ரன் குவிப்பு 150 ரன்களை கடந்தார் ஜோ ரூட்

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சாய்க்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 150 ரன்களைக் கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பர்ன்சும் சிப்லியும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

இந்நிலையில் பர்ன்ஸ் 33 ரன்களிலும், அவரை அடுத்து களமிறங்கிய டேன் லாரன்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 63 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட், சிப்லியுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் சிப்லி 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். அவர் நேற்று 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.'

இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. 4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். இருவரும் சேர்ந்து இந்திய பந்து வீச்சை சமாளித்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். ஜோ ரூட் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தின் மூலம் 150 ரன்களை கடந்தார். பென் ஸ்டோக்சும் சிறப்பாக ஆடி அரை சதத்தை கடந்தார். இன்று உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 156 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு இதுவரை 92 ரன்கள் சேர்த்துள்ளனர்.

You'r reading விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறல் இங்கிலாந்து ரன் குவிப்பு 150 ரன்களை கடந்தார் ஜோ ரூட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விவசாயிகள் போராட்டம்.. பிரதமருக்கு சுப்பிரமணியசாமி சொல்லும் ஆலோசனை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்