இந்தியா 286 ரன்களில் ஆல் அவுட் இங்கிலாந்தை விட 481 ரன்கள் முன்னிலை அஷ்வின் அபார சதம்

இந்தியா இன்று 2வது இன்னிங்சில் 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அஷ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். இங்கிலாந்து மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது.சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மாவின் 161 மற்றும் துணை கேப்டன் அஜிங்கியா ரகானேவின் 67 ரன்கள் உதவியுடன் இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.

ஆனால் இந்திய பவுலர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக அஷ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணியால் முதல் இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா முதல் இன்னிங்சில் 195 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் 161 ரன்கள் குவித்த ரோகித் சர்மா 26 ரன்களில் அவுட் ஆனார்.

தொடர்ந்து புஜாரா 7 ரன்களிலும், ரிஷப் பந்த் 8 ரன்களிலும், துணை கேப்டன் ரஹானே 10 ரன்களிலும், ரிஷப் பந்த் 8 ரன்களிலும், குல்தீப் யாதவ் 3 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோஹ்லி அபாரமாக ஆடி 62 ரன்கள் எடுத்தார். 7வது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லியும், அஷ்வினும் சேர்ந்து 96 ரன்கள் சேர்த்தனர். ஒரு முனையில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வந்த போதிலும் மறுமுனையில் அஷ்வின் மிகச் சிறப்பாக ஆடி 106 ரன்கள் எடுத்தார். அவர் 91 ரன்களில் இருந்தபோது சிக்சர் அடித்து சென்னை ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். அஷ்வினின் அதிரடி சிக்சரை பார்த்து கேப்டன் விராட் கோஹ்லியே ஆச்சரியமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பந்தில் 2 ரன்களும், அதற்கு அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்து அஷ்வின் சென்னையில் தன்னுடைய முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இவர் 99 ரன்களில் இருந்தபோது எந்த விதமான பதற்றமும் இல்லாமல் பவுண்டரி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது டெஸ்ட் போட்டியில் அஷ்வினின் 5வது சதமாகும். இது இங்கிலாந்துக்கு எதிராக இவரது முதல் சதமாகும். மற்ற நான்கு சதங்களும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இவர் அடித்துள்ளார். அஷ்வின் தன்னுடைய சதத்தில் 14 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் விளாசினார். இறுதியில் அஷ்வின் 106 ரன்களில் ஒல்லி ஸ்டோனின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 286 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிராஜ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் இரண்டு சிக்சர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 49 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் இந்தியா 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து 482 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

You'r reading இந்தியா 286 ரன்களில் ஆல் அவுட் இங்கிலாந்தை விட 481 ரன்கள் முன்னிலை அஷ்வின் அபார சதம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்த காலத்தில் திரைக்கதை எழுதுவது கடினமாகி விட்டது.. நாயே பேயே பட விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்