தோல்வியை நோக்கி இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்தது... வெற்றி பெற இன்னும் 429 ரன்கள் தேவை...!

சென்னை டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 429 ரன்கள் எடுக்க வேண்டும்.சென்னை டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன் பின்னர் இந்தியா தங்களுடைய 2வது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்சில் இந்தியா 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியா 481 ரன்கள் முன்னிலை பெற்றது. அஷ்வின் மிகச் சிறப்பாக ஆடி சதமடித்தார். இவர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக கேப்டன் விராட் கோஹ்லி 62 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதன் பின்னர் 482 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்சும், சிப்லியும் களமறங்கினர்.

ஆனால் 2வது இன்னிங்சிலும் இங்கிலாந்துக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சிப்லி 3 ரன்களில் அக்சர் படேலின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து 17 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. இதன்பிறகு பர்ன்சுடன் டேன் லாரன்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் சிறப்பாக ஆடி வந்த பர்ன்ஸ் 25 ரன்களில் அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து 49 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு நைட் வாட்ச்மேனாக ஜேக் லீச் களமிறங்கினார். ஆனால் அவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.லீச் ரன் எடுப்பதற்குள் அக்சர் படேலின் பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து 50 ரன்களில் 3வது விக்கெட்டையும் இழந்தது.

இதன் பின்னர் 4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார். இன்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 2 ரன்களுடனும், லாரன்ஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இங்கிலாந்து இன்னும் வெற்றி பெற 429 ரன்கள் எடுக்க வேண்டும். இங்கிலாந்துக்கு இன்னும் கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் பாக்கி உள்ளது. எனவே இங்கிலாந்து கிட்டத்தட்டத் தோல்வியடைவது உறுதி ஆகிவிட்டது.

You'r reading தோல்வியை நோக்கி இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்தது... வெற்றி பெற இன்னும் 429 ரன்கள் தேவை...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விமான பயணம் மூலம் திருப்பதி தரிசனம் : புதிய திட்டம் அறிமுகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்