ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு ஐந்து வெள்ளிப் பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகின்றன. 18வது ஆசிய போட்டியின் எட்டாம் நாளான ஞாயிறன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெண்கள் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் இந்தியா வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது.
20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், மாநிலங்களுக்கிடையேயான தேசிய சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் போட்டி ஆகியவற்றில் தங்கம் வென்ற ஹிமா தாஸ், ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். 400 மீட்டர் தொலைவை இவர் 50.79 விநாடிகளில் கடந்துள்ளார்.
 
ஆண்களுக்கான 400 மீட்டர் பந்தயத்தில் கத்தார் நாட்டின் அப்தேலேலா ஹாசன், 44.89 விநாடிகளில் கடந்து தங்கமும், பஹ்ரைன் நாட்டின் அலி காமிஸ் 45.70 விநாடிகளில் கடந்து வெண்கலமும் பெற்றனர். இந்தியாவின் முகமது அனாஸ் 400 மீட்டர் தூரத்தை 45.69 விநாடிகளில் கடந்து இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் டுடீ சந்த் (11.32 விநாடி) வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2014 சர்வதேச தடகளப் போட்டிகளில் பாலின சோதனை பிரச்னையில் சிக்கிய டுடீ சந்த், மனந்தளராமல் போராடி மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். தற்போது சர்வதேச தடகள கூட்டமைப்பின் தரவிதிகளும் மாற்றப்பட்டுள்ளன. 22 வயதான டுடீ சந்த், முதன்முறையாக ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனார்.
 
குதிரையேற்றம் தனிநபர் போட்டியில் இந்தியாவின் பவுத் மிர்சாவும், அணிகள் போட்டியில் பவுத் மிர்சா, ஜிதேந்தர், ஆஷிஸ், ராகேஷ் உள்ளிட்ட இந்திய அணியும் வெள்ளி வென்றுள்ளனர். தனிநபர் குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு மிர்சா, பதக்கம் வாங்கி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரை இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலத்துடன் மொத்தம் 36 பதக்கங்களை வென்றுள்ளது. தற்போது பதக்கப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

You'r reading ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு ஐந்து வெள்ளிப் பதக்கங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாட்டிறைச்சி சாப்பிட்டுவதே கேரள வெள்ளத்திற்கு காரணம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்