ஆசிய விளையாட்டுப் போட்டி... ஹாக்கியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஹாக்கியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12-ஆவது நாளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் முக்கியமான பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.

தடகளப் போட்டிகளில் 1951ம் ஆண்டு 7 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் பெற்றதே இந்தியாவுக்கு அதிகப் பட்சமாக இருந்து வந்தது. இந்த முறை இந்திய தடகள வீரர்களும் வீராங்கனைகளும் வியக்கத்தக்க வெற்றிகளை குவித்துள்ளனர்.

இன்னும் இரண்டு நாட்கள் போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், இதுவரை பெற்ற அதிகப் பட்ச மொத்த பதக்கங்களான 57 என்ற எண்ணிக்கையை கடந்து 59 பதக்கங்களை குவித்துள்ளது. தங்கப் பதக்கங்களை பொறுத்தமட்டில் 2014ம் ஆண்டு 11 பெற்றதே அதிகப் பட்சம். இந்தப் போட்டியில் இதுவரை 13 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சொந்த நாட்டு வீரரிடம் தங்கத்தை இழந்த ஜின்சன் ஜாண்சன் 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டியுள்ளார். 3:44.72 என்ற நேரத்தில் அவர் மொத்த தூரத்தைக் கடந்து வெற்றி பெற்றுள்ளார்.

ஹிமா தாஸ், எம்.ஆர். பூவம்மா, சரிதாபென் கயக்வாட், விஸ்மயா வெல்லுவா கோரோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. தொடர் ஓட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

குன்ஹு முகமது, தருண் அய்யாசாமி, முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ் அடங்கிய இந்திய ஆடவர் அணி 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றது. பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பி.யூ. சித்ராவும், வட்டு எறிதலில் சீமா புனியா வெண்கலம் வென்றுள்ளனர்.

ஹாக்கியில் அசைக்கமுடியாத சாம்பியனாக இருந்து வந்த இந்தியா, இந்த ஆசிய போட்டியின் அரையிறுதியில் மலேசியாவிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 6 - 7 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளது.

13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது இந்தியா!

You'r reading ஆசிய விளையாட்டுப் போட்டி... ஹாக்கியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நான்காவது டெஸ்ட் - 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்