அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 15 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு!

Car gift to Ranjith Kumar who won in Alankanallur Jallikattu

உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15 காளைகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்திய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் களைகட்டி நடந்து வருகிறது.மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை முதல் நாளும், பாலமேட்டில் தை 2-ம் நாளும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தன.

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக மாலை 4.50 மணி வரை நடந்தது.

அப்படியும் பதிவு செய்யப்பட்ட 1400-க்கும் மேற்பட்ட காளைகளில் 730 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழு என வீரர்கள் களம் கண்டனர். சீறி வந்த காளைகளை தீரத்துடன் காளையர்கள் அடக்க முயன்றனர்.

வெற்றி, தோல்வி என காளைகளுக்கும், காளையர்களுக்கும் மாறி, மாறி கிடைத்ததை பல்லாயிரக்கணக்கானோர் நேரிலும், பல கோடிப் பேர் நேரலைகளிலும் கண்டு ரசித்தனர். சீறி வந்த காளைகளை தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் வாரி வழங்கப்பட்டன.

இதேபோல் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் அள்ளிக் கொடுக்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் 40 பேர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் மரணமடைந்தனர்.

ஜல்லிக்கட்டில் 15 காளைகளை தீரத்துடன் அடக்கிய அலங்காநல்லூர் ரஞ்சித் குமாருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப் பட்டது. வீரர்களின் பிடியில் சிக்காமல் சுற்றிச் சுழன்று ஆட்டம் காட்டிய பரம்புப் பட்டியைச் சேர்ந்த காளையின் உரிமையாளர் கார்த்திக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த வீரர்கள், காளைகள் என 2-வது, 3-வது பரிசுகளும் வழங்கப்பட்டன. அலங்காநல்லூர் தவிர தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

You'r reading அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 15 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தருமபுரியில் மட்டும் ஜெயிச்சாவே போதும் .. ஸ்டாலினுக்காக அன்புமணி 'வெயிட்டிங்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்