ஸ்டெர்லைட் எதிர்ப்பு: ஜனவரி 24 கறுப்பு தினம்

Sterlite resistance:January 24 Black Day

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறப்பதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஜனவரி 24ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது.தூத்துக்குடி வாழ் மக்களுக்கு இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா பாபு விடுத்துள்ள அழைப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறப்பதற்கு எதிர்ப்பை காட்டும் வண்ணம் ஜனவரி 24ம் தேதி வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும்.

அனைவரும் கறுப்பு வண்ண ஆடையை அணியவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நிலத்தின் வளத்தை கெடுத்து சமுதாய அமைதியை சீரழித்த பின்னர் மக்களை ஏமாற்றும் திட்டங்களுக்கு ஸ்டெர்லைட் பணத்தை வாரி இறைப்பதாகவும் அந்த இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் வன்முறையற்ற அறவழிப்போராட்டம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் கூட்டமைப்பு, தூத்துக்குடி மாவட்ட இயந்திர படகு மீனவர் கூட்டமைப்பு, தூத்துக்குடி நகர வர்த்தக மைய கூட்டமைப்பு மற்றும் ஆழ்கடல் இயந்திர படகு மீன்பிடி மேம்பாட்டு கூட்டமைப்பு ஆகியவை இக்கறுப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர ஹிந்து முன்னணி செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்துள்ளார்.

ஆலை திறப்பு எதிராக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதால் தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று வாராந்தர குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கோரி கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி, சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றம் முன்பு திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டையை சேர்ந்த தங்கதுரை என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் அவர் ஆலைக்கு ஆதரவாக தீவிரமாக இயங்கி வந்தார். தங்கதுரையின் மனைவி பூங்கொடி, ஆலைக்கு ஆதரவாக போராடிய தம் கணவரின் மறைவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

You'r reading ஸ்டெர்லைட் எதிர்ப்பு: ஜனவரி 24 கறுப்பு தினம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜோசியம் பார்ப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலியாவில் தமிழக ஜோதிடர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்