கூட்டணிக்கு ட்ரீட் கொடுக்கும் ராமதாஸ்! - ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்காக தைலாபுரத்தில் தயாராகும் தடபுடல் விருந்து!

eps and admk members will visit ramadoss house for lunch

``கார் மேகம் உள்ளவரை, கடல் உள்ளவரை, தமிழ் உள்ளவரை அ.தி.மு.க., தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை" இப்படி அறிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸே இதை உதறித்தள்ளிவிட்டு அ.தி.மு.கவுடன் இணைந்துவிட்டார். இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமாகி தொகுதி பங்கீடும் முடிந்துவிட்டது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.கவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு தற்போது அ.தி.மு.கவுடன் பா.ம.க. கூட்டணி அமைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டணியை விமர்சித்து நேற்று வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். பா.ம.கவை விமர்சிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த #மண்டியிட்டமாங்கா ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். ஆனால் இந்த எதிர்ப்பை எல்லாம் இருகட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் வேலைகளில் மும்மரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, இந்த புதுக் கூட்டணிக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுகவினருக்கு விருந்து வைக்க உள்ளாராம் ராமதாஸ். நாளை மறுதினம் மதியம் தைலாபுரம் தோட்டத்தில் இதற்கான விருந்து நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தைலாபுரம் தோட்டத்தில் ஜரூராக நடந்து வருகிறது.

இந்த விருந்தில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸை தவிர கூட்டணி அமைக்க அச்சாரமாக விளங்கிய அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான அன்றே ராமதாஸ், அன்புமணி உட்பட பா.ம.க. தலைவர்களை தனது வீட்டுக்கு அழைத்து தேநீர் விருந்து அளித்து உபசரித்தார் எடப்பாடி. அன்றைக்கு தான் ராமதாஸும் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு எடப்பாடி ஓகே சொன்னதும் தற்போது விருந்து ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.

You'r reading கூட்டணிக்கு ட்ரீட் கொடுக்கும் ராமதாஸ்! - ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்காக தைலாபுரத்தில் தயாராகும் தடபுடல் விருந்து! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாவூறும் மாங்காய் பச்சடி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்