தமிழகத்தில் புரோகித் ஆட்சியா? ஆளுநரை வசைபாடிய ராகுல்!!

Modi and rahul spoke tamilnadu local politics in their campaign

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடியவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.--= பா.ஜ.க. கூட்டணிக்காக பிரதமர் நரேந்திர மோடியும், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் படையெடுத்து வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். வழக்கமாக, நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள், நாடு முழுக்க உள்ள பிரச்னைகளைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், இந்த முறை மோடியும், ராகுலும் உள்ளூர் பிரச்னைகளை மையமாக வைத்து பேசுகிறார்கள்.

சென்னையில் ஏற்கனவே பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, கடந்த வாரம் கோவைக்கு வந்தார். அப்போது அவர், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தி.மு.க.காங்கிரஸ் கூட்டணியின் செயல்பாடு சரியில்லாததால், கோவை குண்டுவெடிப்பு சம்பவே நிகழ்ந்தது என்ற ரீதியில் பேசினார். அது மட்டுமல்ல, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு வந்து விடக் கூடாது என்பதற்காகவே, பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தி.மு.க., காங்கிரஸ் மீது கடுமையாக குற்றம்சாட்டினார்.

இதே போல், ராகுலும் உள்ளூர் பிரச்னைகளை நன்கு கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை பேசினார். நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 ஊர்களுக்கு பறந்து சென்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திலும் அவர் உள்ளூர் அரசியலை தெளிவாக பேசினார். ‘‘தமிழர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தமிழர்களை தமிழன்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து ஆளக் கூடாது’’ என்று அவர் கூறினார். அதாவது, நாக்பூர் என்று அவர் சொன்னது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைத்தான். காரணம், அவர் நாக்பூர்காரர். ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் 2 முறையும், பா.ஜ.க. சார்பில் ஒரு முறையும் நாக்பூர் எம்.பி.யாகவும், ஒரு முறை நாக்பூர் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் புரோகித். பா.ஜ.க. டெல்லியில் இருந்து கொண்டு புரோகித் மூலமாக தலைமைச் செயலாளரை கட்டுக்குள் வைத்து ஆட்சியை நடத்துகிறார் என்பதைத்தான் ராகுல்காந்தி மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

அதே போல், கருணாநிதி மறைந்த போது அவருக்கு இடம் ஒதுக்காமல் அ.தி.மு.க. அரசு அவமானப்படுத்தியது என்றும், அதை தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாக நினைக்க வேண்டும் என்றும் ராகுல் குறிப்பிட்டார். அதே போல், பணக்காரர்களை சந்திக்கும் பிரதமர் மோடி, தமிழகத்தின் ஏழை விவசாயிகள் டெல்லியில் போராடியது கண்டுகொள்ளவே இல்லை என்றும் பேசினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மதுரை, தேனியில் பிரச்சாரம் செய்கிறார். அவர் இந்த முறையும் தனது பேச்சில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை துவைத்து எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

You'r reading தமிழகத்தில் புரோகித் ஆட்சியா? ஆளுநரை வசைபாடிய ராகுல்!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தவான் தாண்டவம்; கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்