கட்சி, ஆட்சி நல்லாத்தான் போகுது.... ராசன் செல்லப்பா கருத்துக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு ... காரணம் என்ன?

Reasons behind Admk ministers are not supporting MLA Rajan chellappas reaction on party leadership issue

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும். யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. பொதுக் குழுவைக் கூட்டி செல்வாக்கு படைத்த தலைவரை தலைமைப் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான ராசன்செல்லப்பா நேற்று கொளுத்திப் போட்டார். அவரின் இந்தக் கருத்தால் அதிமுகவில் சலசலப்பும், கலகமும் ஏற்படும் என எதிர் பார்க்கப்பட்டது.

 

ஆனால், அதிமுக அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் தலைமைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து, ராசன்செல்லப்பா எழுப்பிய போர்க் குரலை புறந்தள்ளி மழுங்கச் செய்துள்ளனர்.


மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவும், மதுரை புற நகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ராசன் செல்லப்பா, நேற்று திடீரென செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த பேட்டி அளித்தார். கட்சியில் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்ட, செல்வாக்கு மிக்க ஒருவர் தலைமைப் பதவியை ஏற்க வேண்டும். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை. தற்போது ஆளுமைத் திறனுடைய தலைவர்கள் கட்சிப் பொறுப்பில் இல்லை. 2 பேர் தலைமை பொறுப்பில் இருப்பதால் எந்த முக்கிய முடிவும் எடுக்க முடியவில்லை.
அதிமுகவில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என தெரியவில்லை. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்னும் பொதுக்குழு கூட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது. உடனே பொதுக் குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும். ஆளுமைத் திறனுடைய ஒற்றைத் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்சி விவகாரங்கள் பலவற்றையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

 

எம்.ஜி.ஆர் காலம் முதல் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்து வரும் ராசன் செல்லப்பாவின் இந்த திடீர் போர்க்கொடியால் அதிமுகவில் பெரும் கலகம் வெடிக்கும், பிரச்னைகள் உருவாகும் என்றெல்லாம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ராசன்செல்லப்பா கூறியதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனடி ரியாக்சன் எதையும் காட்டாமல், பேட்டியை முழுவதும் பார்க்கவில்லை என்று நழுவலாக பதில் கூறி விட்டனர்.


ஆனால் அதிமுக அமைச்சர்களில் ஒருவர் கூட, ராசன் செல்லப்பா கருத்தை வரவேற்றோ, ஆதரித்தோ கூறவில்லை. மாறாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தலைமையில் கட்சியும், ஆட்சியும் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது என்ற ரீதியில் பதிலளித்து வருகின்றனர். இதற்குக் காரணம் ராசன் செல்லப்பாவின் குறி எல்லாம் மந்திரி பதவி ஆசையால்தான். எனவே அவருடைய கருத்தை ஆதரித்தால், தங்களுடைய அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்தாலும் வரலாம் என்ற உஷார் தான் என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில், ராசன் செல்லப்பாவின் கருத்துக்கு முன்னாள் எம்.பியான கே.சி. பழனிசாமி,குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராசன்செல்லப்பா எழுப்பியுள்ள கலகக் குரல் வலுக்குமா? பிசுபிசுத்து விடுமா? என்று ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

You'r reading கட்சி, ஆட்சி நல்லாத்தான் போகுது.... ராசன் செல்லப்பா கருத்துக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு ... காரணம் என்ன? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திர உள்துறை அமைச்சராக தலித் பெண் பொறுப்பேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்