மோடி அமைச்சரவையில் தி.மு.க. சேருகிறதா? டி.ஆர்.பாலு விளக்கம்

will dmk join Modi cabinet? T.R.Balu denies

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள தே.ஜ. கூட்டணி ஆட்சியில் தி.மு.க. சேரும் என்பது பொய்ச் செய்தி என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே 303 தொகுதிகளில் வென்றது. எனினும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும்(அதிமுக தவிர) ஒரு அமைச்சர் பதவி தரப்பட்டது. அதிமுகவில் யாருக்கு தருவது என்ற குழப்பத்தால் அமைச்சர் பதவி தரப்படவில்லை என்று கூறப்பட்டது.


இந்நிலையில், தமிழகத்தில் அதிமுகவை கழட்டி விட்டு, தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. ஒரு நாளேட்டில் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கேற்கப் போகிறது என்று செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:
நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்பாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து, அந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று.


அந்த பழக்கப்படி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், இணை அமைச்சர் அர்ஜீன்ராமும் என்னை சந்தித்து பேசியது உண்மைச் செய்தி.


அவர்கள் என்னிடம் பேசிய போது, நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து பேசினர். எந்தெந்தத் தேதிகளில் எத்தகைய நிகழ்வுகளை அரசாங்கம் மேற்கொள்விருக்கிறது என்பதைத் தெரியப்படுத்தினர்.

 

ஆனால் ஆறு மாதம் கழித்து தி.மு.க. உறுப்பினர்கள் பா.ஜ.க. மத்திய அமைச்சரசையில் இடம் பெறுவார்கள் என்று ஒரு நாளேட்டில் யூகச்செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடைந்து எடுத்த கலப்படமற்ற பொய் .
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரின் அடியொற்றிப் பயணிக்கின்ற உண்மைத் தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஒளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்றுக் கண்கள் என்பதை வரலாறு அறியும். இதில் ஜனநாயகக் குருடர்களுக்கு வேலை இல்லை.
இவ்வாறு கூறியுள்ளார்.

You'r reading மோடி அமைச்சரவையில் தி.மு.க. சேருகிறதா? டி.ஆர்.பாலு விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்தில் மோடி அஞ்சலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்