சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

Controversial video viral on social media, admk minister CV shanmugam complaints in police

சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நல்ல போதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்த பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட, அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிய போது நடந்த சம்பவம் தான் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

கொழு, கொழுவென்ற உடல் வாகுடன், நல்ல போதையில் இருந்த அந்த பணக்கார வீட்டு இளைஞன் போலீசாருடன் ஏகத்துக்கும் ரகளையில் ஈடுபட்டு, சகட்டுமேனிக்கு தாக்கவும் செய்கிறார். ஒரு கட்டத்தில், பெரிய இடத்து வம்பு நமக்கேன் என்று போலீசாரும் அந்த இளைஞரை சமாதானப்படுத்த முயல்கின்றனர். ஆனாலும் போதையில் ரவுசு காட்டும் அந்த இளைஞரை போலீசாரால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. கடைசியில் ஒரு வழியாக அந்த இளைஞரை சமாதானப் படுத்தி போலீசார் அழைத்துச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.


அந்த வீடியோவில் உள்ள நபர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் தான் எனக் குறிப்பிட்டு யாரோ விஷமி ஒருவர் விதண்டாவாதமாக சமூக வலைதளங்களில் பதிவிட வில்லங்கமாகி விட்டது. அது மட்டுமின்றி அந்த வீடியோ இன்னும் படு ஸ்பீடாக வைரலாகி விட்டது.


கடைசியில் அந்த வீடியோவில் ரவுசு காட்டிய இளைஞர் மதுரையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரின் மகன் என்பதும், அவருடைய பெயர் நவீன் என்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞரை பிடித்துச் சென்ற நீலாங்கரை போலீசார் நன்கு நையப் புடைத்து கவனித்ததில் கையில் மாவுக்கட்டு போடுமளவுக்கு சென்றுள்ளது. கையில் கட்டுடன் அந்த இளைஞர் நவீனின் புகைப்படத்தையும் வெளியிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் அல்ல இவர் என்று கூற வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.


இந்நிலையில் தான், குடிபோதையில் கார் ஓட்டி வந்து தகராறு செய்த இளைஞரை தனது மகன் என தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

You'r reading சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அவங்க 37 பேர்... நான் ஒத்தை ஆள்...! மக்களவையில் கெத்து காட்டிய ரவீந்திரநாத் குமார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்