தமிழக எம்பிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏன் தமிழ்ப்பற்று இதுதானா?

BJP leader thamizisai questions in twitter, TN MPs speaking English instead of Tamil in parliament

தமிழகத்தில் பாஜகவுக்கு முட்டுக் கொடுப்பதாக நினைத்து, இந்தித் திணிப்பாகட்டும், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோகார்பன் என மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எத்தனை கடும் எதிர்ப்புகள் வந்தாலும் வக்காலத்து வாங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். அந்த வகையில் இப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேசுவதை விமர்சித்துள்ளார். தமிழால் அரியணை ஏறியவர்கள், தமிழை அரியணை ஏற்றாதது ஏன்? என்றும் இதுதான் தமிழ்ப்பற்றா? என்றும் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழிசையின் இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.


பல மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் இணைப்பு மொழியாக உள்ளது ஆங்கிலம் தான். ஆனால் சுதந்திரம் பெற்று முதன் முதலில் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஆகட்டும், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவாகட்டும் நாடு முழுமைக்கும் இந்தியை தேசிய மொழியாக்கி பட வேண்டும் என்று கங்கணம் கட்டி, வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்க முயல்கின்றன.


ஆனால், இந்த இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் மட்டுமே எடுபடாமல் போய் விடுகிறது. 1960களில் நடந்த மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டமே திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வரவும் காரணமாக இருந்தது உண்மை. இரு மொழிக் கொள்கைதான் வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்றத்தில் முழங்கினார் அண்ணா. அப்போது அவரது ஆவேச முழக்கம் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் தான் அமைந்தது. ஏனெனில் அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த பிரதமர் நேருவாகட்டும், மத்திய அமைச்சர்களாகட்டும், ஏன்?எம்.பி.க்களில் பலரும் நன்கு படித்த, ஆங்கிலப் புலமை மிக்கவர்களாக இருந்தனர். இதனாலேயே தான் எடுத்துரைக்கும் வாதம் அனைவருக்கும் சுளீரென புரிய வேண்டும் என்பதற்காக, தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தினார் அண்ணா.


அண்ணா மட்டுமல்ல, சிறந்த நாடாளுமன்றவாதிகள் என பேர் பெற்ற இரா.செழியன், நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன், வைகோ வரை பலரும் முக்கியப் பிரச்னைகளில் ஆங்கிலத்தில் தான் முழக்கமிட்டுள்ளனர். ஏன் தற்போதுள்ள கனிமொழி, திருச்சி சிவா என திமுக எம்.பி.க்கள் மட்டுமின்றி அதிமுக எம்பிக்கள் பலரும் ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


இதற்கெல்லாம் காரணம் ஆங்கிலத்தில் பேசினால், நாடாளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் உடனே புரியும் என்பதால் தானே ஒழிய, தாய் மொழி தமிழை புறக்கணிக்கிறார்கள் என்று கூற முடியாது. நாடாளுமன்றத்தில் தமிழ் உள்பட பல்வேறு மாநில மொழிகளிலும் பேசும் உரிமை உள்ளது. அதனை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதியும் உள்ளது. ஆனால் மாநில மொழியில் ஒருவர் பேச ஆரம்பித்தவுடன், சம்பந்தப்பட்ட மொழி தெரியாத அமைச்சர்களும்,எம்பிக்களும் காதில் மொழி பெயர்ப்புக் கருவியை அவசரமாக சொருகுவதை சாதாரணமாக பார்க்கலாம். ஆனாலும் மொழி பெயர்ப்பு என்பது, நாம் சொல்ல வந்த ஆணித்தரமான கருத்தை சமயத்தில் சொதப்பி விடும். இதனாலேயே தமிழக எம்.பிக்கள் மட்டுமின்றி இந்தி பேசாத மாநிலங்களின் எம்.பி.க்கள் பலர் ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் இன்னொரு வசதியும் உள்ளது. எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் விவாதிக்கும் போது, அதற்கு பதிலளிக்கும் பிரதமரோ, அமைச்சர்களோ கூட ஆங்கிலம் தெரிந்திருந்தவர்களாக இருந்தால், ஆங்கில மொழியிலேயே பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாக்கப்பட்டு விடுகின்றனர்.


முதலாவது மக்களவை அமைந்த 1952 முதல் தற்போது வரை சுமார் 67 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் இந்த வழக்கத்தை, தமிழகத்தில் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏன்? இது தான் தமிழ்ப் பற்றா? என்று தமிழிசை, ஏதோ பொத்தாம் பொதுவாக ஒப்புக்கு கருத்து கூறி பலரின் கிண்டலுக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகியுள்ளார்.


இப்படித்தான் எதுகை மோனையாக சொல்வதாக நினைத்து ஆண்ட பரம்பரை, குற்ற பரம்பரை என்று கூறி கடும் எதிர்ப்புக்கு ஆளாகி மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இப்போதும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால், தமிழகத்தில் பாலைவனம் சோலைவனமாகும், ஆனால் சோலைவனம் பாலைவனமாகாது என்று ஒரு கருத்தை பதிவிட்டார். அதே போல், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் ஆதங்கத்திற்கு பதிலளிப்பதாக நினைத்து, அவரை சீண்டுவிட்டு சர்ச்சைக்கு ஆளானார் தமிழிசை.

தற்போது தமிழில் எம்பிக்கள் பேசாதது ஏன்? என்று டிவிட்டரில் தமிழிசை கேட்டுள்ளதற்கு பலரும் அவரை கிண்டலடித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பதிலளித்து வருகின்றனர்.

You'r reading தமிழக எம்பிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏன் தமிழ்ப்பற்று இதுதானா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மறைவு; பிரதமர் மோடி, சோனியா அஞ்சலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்