பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடுத் திட்டம் அரசுக்கு எம்.யூ.ஜே. வேண்டுகோள்

madras union of journalists requested tamilnadu government to formulate medical insurance scheme for journalists

ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று தமிழக அரசுக்கு எம்.யூ.ஜே. கோரிக்கை விடுத்துள்ளது.


சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின்(எம்.யூ.ஜே) பொதுக் குழுக் கூட்டம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் பிருந்தா சீனிவாசன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் மணிமாறன், நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் பகவான்சிங், நூருல்லா, விஸ்வநாதன், துரைகருணா உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டம்-1955 கொண்டு வரப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த சட்டத்திற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களை 4 பிரிவுகளாக சுருக்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், ரத்து செய்யப்படும் சட்டங்களில் உழைக்கும் பத்திரிகையாளர் சட்டமும் உள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.


ஆந்திராவில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளி்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்த வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். பணியில் இருந்த போது மரணமடைந்த ஆர்.மோகன், சுந்தரவடிவேல் ஆகியோரின் குடும்பங்களுக்கு விரைவில் குடும்பநல நிதியை வழங்க வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறோம்.  


சங்கத்தின் உறுப்பினர் புதுப்பிப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையை வரும் செப்டம்பருக்குள் முடித்து, டிசம்பருக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்படுகிறது. சென்னை கொட்டிவாக்கத்தில் 1989ம் ஆண்டில் பத்திரிகையாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதே போல், சென்னை அல்லது புறநகர் பகுதியில் அரசே நிலம் ஒதுக்கி, பத்திரிகையாளர் குடியிருப்புகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

You'r reading பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடுத் திட்டம் அரசுக்கு எம்.யூ.ஜே. வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரசிடென்ட் கோப்பை போட்டி; தங்கம் வென்றார் மேரிகோம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்