சித்தார்த்தா தற்கொலை தொழில் துறையில் சர்ச்சை வருமான வரி நடவடிக்கை சரியா?

VG Siddharthas suicide and perils of entrepreneurship

கபே காபிடே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை, தொழிலதிபர்கள் இடையே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.

கபே காபிடே என்ற பிரபல நிறுவனத்தை கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா நடத்தி வந்தார். இவர் முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சரும், தற்போது பாஜகவில் உள்ளவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் மாளவிகாவின் கணவர் ஆவார்.

இந்தியாவில் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் காபி டே நிறுவனங்களை பல ஆண்டுகளாக சித்தார்த்தா நடத்தி வந்தார். கடந்த திங்கட்கிழமை பெங்களூருவில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்ற சித்தார்த்தா, மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் இறங்கி நடைப்பயிற்சி செய்து விட்டு வருவதாக டிரைவரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால், தீவிரமாக தேடி வந்தனர். இதன்பின், சித்தார்த்தாவின் சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

இந்நிலையில், தனது கம்பெனியின் டைரக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சித்தார்த்தா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், அவர் முன்பிருந்த வருமானவரித் துறை தலைமை இயக்குனர், தனது சொத்துக்களை முடக்கி தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், 2 சமயங்களில் தனது நிறுவனத்தின் பங்குகளை மீட்டெடுக்க விடாமல் செய்து விட்டார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தற்போது நாடு முழுவதும் உள்ள தொழிலதிபர்களிடையே பலவிதமான விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. வரி ஏய்ப்புகளை கண்டுபிடித்து உரிய அபராதத்துடன் வசூலிப்பதும், வரி ஏய்ப்பு செய்வோரை தண்டிப்பதும் வருமான வரி, ஜி.எஸ்.டி உள்ளிட்ட அரசு ஏஜென்சிகளின் கடமைதான். ஆனால், நடவடிக்கை என்ற பெயரில் தொழிலை முடக்குவது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனாலும், தொழிலதிபர்கள் யாரும் பகிரங்கமாக விவாதிக்கத் தயாராக இல்லை. காரணம், அரசை விமர்சித்தால் அரசியல் சாயம் பூசப்பட்டு பலிகடாவாகி விடுவோமோ என்ற அச்சம்தான் காரணம்.

ஏற்கனவே மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு, ‘டேக்ஸ் டெரரிஸம்’ என்று பெயரிட்டு, தொழிற்துறையினர் விமர்சித்து வருகின்றனர். சிறு, குறு தொழில்கள் எல்லாம் நசிந்து போய் விட்ட நிலையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தற்போது அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு பெரும் பணக்காரரான சித்தார்த்தாவின் மரணம் ஒரு முக்கியக் காரணம். சித்தார்த்தாவின் குடும்பம் 130 ஆண்டுகளாக காபி தொழிலில் ஈடுபட்ட குடும்பம். சித்தார்த்தாவின் காபிடே 1700க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை கொண்டது. இந்தியா மட்டுமின்றி, மலேசியா, எகிப்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும் இயங்குகிறது. நிறுவனத்திற்கு 30 ஆயிரம் ஏக்கர் காபித் தோட்டங்கள் உள்ளது. இந்த குரூப்பைச் சேர்ந்த ஏபிசி நிறுவனம் உலகின் மிகப் பெரிய காபி ஏற்றுமதி நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் கடந்த 2017ம் ஆண்டு வருமானவரித் துறை திடீரென ரெய்டு நடத்தியது. தொடர்ச்சியாக நடந்த ரெய்டுளில் மொத்தமாக ரூ.480 கோடி வருமானம், கணக்கி்ல் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்தது. இதற்கு 30 சதவீத வரி மற்றும் 300 சதவீத அபராதம் விதித்து கணக்கிட்டால், கிட்டத்தட்ட ரூ.640 கோடி வரும். ஆனால், வருமானவரித் துறையோ, சித்தார்த்தாவின் ரூ.16 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கியிருக்கிறது.

சித்தார்த்தாவின் கடிதத்தில் சுட்டிக்காட்டியபடி பார்த்தால், மைன்ட் ட்ரீ பங்குகளை மட்டும் வருமான வரித் துறை விடுவித்திருந்தால், அதை எல் அன்ட் டி நிறுவனத்திற்கு ரூ.3200 கோடிக்கு விற்று கடன்களை அடைத்திருக்கலாம். ரூ.640 கோடிக்காக அவ்வளவு சொத்துக்களை முடக்கியது சட்டத்தின் பார்வையில் சரியாக தெரிந்தாலும், அது நியாயமானதா? அது தொழிலை சீர்குலைக்கச் செய்யாதா? என்பதே இப்போது தொழிலதிபர்கள் எழுப்பும் கேள்வி.

இதற்கிடையே, காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமாக சித்தார்த்தா இருந்தார் என்றும் அதுவே அவருக்கு பல நெருக்கடிகளை கொடுத்தது என்றும் கர்நாடகாவில் பேசப்படுகிறது.

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் மங்களூருவில் திடீரென மாயம்; காபிடே நிறுவனத்தை துவங்கியவர்

You'r reading சித்தார்த்தா தற்கொலை தொழில் துறையில் சர்ச்சை வருமான வரி நடவடிக்கை சரியா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடக புதிய சபாநாயகரானார் விஷ்வேஸ்வர் ஹெக்டே ; போட்டியின்றி தேர்வானார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்