கடும் இழுபறியில் வேலூரில் திமுக வெற்றி வாக்கு வித்தியாசம் நோட்டாவை விட கம்மி

Vellore Loksabha election, DMK candidate Kathie Anand win

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் கடும் இழுபறிக்குப் பின் 7734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கோட்டை எட்டினார் கதிர் ஆனந்த்.நோட்டா பெற்ற 9292 வாக்குகளை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

 

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்னையாகக் கொண்டு, அதிமுகவும், திமுகவும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டிய நிலையில் கடந்த 5-ந் தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கும்
இடையே பெரும் இழுபறியாகவே இருந்தது. 4, 5, 6-வது சுற்றுகளின் போது ஏ.சி.சண்முகம் கூடுதலாக முன்னிலை பெறத் தொடங்கினார். சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வரை முன்னிலையில் சென்ற ஏ.சி.சண்முகத்தை, 10-வது சுற்றுக்குப் பின், பின் தள்ளி கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.


கதிர் ஆனந்தும் 22 ஆயிரம் வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் மீண்டும் நிலவரம், தலைகீழாக மாறத் தொடங்கியது. கடைசி 4 சுற்றுக்கள் இருக்கும் போது வித்தியாசம் 8 ஆயிரமாக குறைந்தது .


இதனால் வெற்றி யாருக்கு என்பது மதில் மேல் பூனையான நிலையில், அதிமுக, திமுக தரப்பில் பதற்றமே தொற்றிக் கொண்டது எனலாம். ஆனால் கடைசிச் சுற்றுகளில் பெரிய மாற்றமோ, அதிசயமோ நிகழாமல் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு சரிசம வாக்குகள் கிடைத்தது. இதனால் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 7734 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிக் கோட்டை எட்டி எம்.பி.யாகி உள்ளார். இந்தத் தொகுதியில் கதிர் ஆனந்த் பெற்ற வெற்றி வித்தியாசம் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை விட குறைவு என்பதும் கூடுதல் தகவல். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமியும் கணிசமான வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை முடிவு :

கதிர் ஆனந்த் (திமுக):4,83,099

ஏ.சி.சண்முகம் (அதிமுக): 4,75,365

தீப லட்சுமி (நாம் தமிழர்) : 26,880

நோட்டா : 9292

 

வேலூரில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதன் மூலம் மக்களவையில் திமுக எம்.பி.க்களின் பலம் 24 ஆக உயர்ந்துள்ளது.

வேலூரில் வெற்றி யாருக்கு..? நாளை வாக்கு எண்ணிக்கை

You'r reading கடும் இழுபறியில் வேலூரில் திமுக வெற்றி வாக்கு வித்தியாசம் நோட்டாவை விட கம்மி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதில் மேல் பூனை..! வேலூரில் வெற்றி யாருக்கு? கடைசிக் கட்டத்தில் மீண்டும் இழுபறி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்