வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்

Vellore Loksabha election win, DMK leader mk Stalin thanks to voters

வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று வேலூர் தேர்தல் வெற்றி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


வேலூர் மக்களவைத் தொகுதியில் கடும் இழுபறிக்குப் பின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தாமதப்படுத்த முயற்சிக்கலாம்; தடுக்க முடியாது என்பதுபோல, திமுகழகத்தின் வெற்றிப் பயணத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். தி.மு.கழகத்திற்கு வெற்றி மாலை சூடியிருக்கிறார்கள் வேலூர் வாக்காளர்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

பொதுத்தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலை, திட்டமிட்டு சதி செய்து, தி.மு.க மீது பழிபோட்டு, வெற்றியைத் தடுத்துவிடலாம் என நப்பாசை கொண்டு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே! தனியாக நடைபெற்ற தேர்தல் என்பதால் அதிமுக ஆட்சியாளர்களின் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரை வளைத்து முற்றுகையிட்டு, அதிகார அத்துமீறல்களுடன் ஆட்டம் போட்டனர். எதிர்க்கட்சியான திமுக தனது தொண்டர் பட்டாளத்தையும், தோழமைக் கட்சிகளின் பலத்தையும், பொதுமக்களின் பேராதரவையும் நம்பிக் களமிறங்கியது.

மக்களவைத் தேர்தலில் தி.மு.க., மிட்டாய் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவதுபோல வாக்காளர்களை ஏமாற்றிவிட்டது என தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தி, இழிவு செய்த முதலமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினரின் விஷமப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலும், மத்திய-மாநில ஆட்சியாளர்களின் எதிர்மறைச் செயல்பாடுகளினால் மக்கள் சந்திக்கும் அவலங்களை எடுத்துரைக்கும் வகையிலும், கழகத் தலைவர் என்ற முறையில் நானும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களப்பணியாற்றினோம்.

அயராத உழைப்பும், சரியான வியூகமும் கொண்டு செயல்பட்ட உடன்பிறப்புகளின் தொண்டும், வேலூர் வாக்காளர்கள் தந்த ஆதரவும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் மீறி வேலூர் கோட்டையைக் கழகத்தின் வெற்றிக் கோட்டையாக்கியிருக்கிறது.

இந்தியா எதிர்பார்த்த இந்தத் தொகுதியின் முடிவு, தி.மு.கழகத்திற்குச் சாதகமாகியிருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை நிலைநிறுத்தி, அதற்கான எண்ணிக்கையைப் பெருக்கியிருக்கிறது. இடைத்தேர்தல் போன்ற இத்தகைய தேர்தலில், ஆளுங்கட்சியைத் தோற்கடித்து, எதிர்க்கட்சி பெறுகின்ற வெற்றியே விதிவிலக்கான இணையிலா வெற்றிதான். இந்த மாபெரும் வெற்றியை, காலமெல்லாம் நம்மை வளர்த்தெடுத்து வழிகாட்டிய நம் நெஞ்சில் வாழும் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் காணிக்கையாக்கி, ஜனநாயக வழிமுறைகளில், திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்கும் மகத்தான பணியில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்!

வெற்றியைச் சாத்தியமாக்கிய வேலூர் வாக்காளர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும், தலைவணங்கி, நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You'r reading வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி மு.க.ஸ்டாலின் உருக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான ஸ்வீட் ரவை புட்டு ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்