அரிவாளுடன் வந்த கொள்ளையரை செருப்பு .. சேர்.. கட்டைகளால் விரட்டியடித்த வீரத் தம்பதி .. குவியும் பாராட்டுகள்

Old couple fights with thieves using slippers and plastic chairs in Tirunelveli, cctv footage going viral on social media:

நெல்லை அருகே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த பண்ணை வீட்டிற்குள் இரவு நேரத்தில் அரிவாள்களுடன் புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதியினர், செருப்பு.. சேர்.. கட்டை.. என கையில் கிடைத்த பொருட்களை கொண்டே தைரியமாக அடித்து விரட்டிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீர, தீரத்துடன் போராடிய அந்தத் தம்பதிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல்.70 வயதான இவர், தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பண்ணை வீட்டுத் தோட்டத்தில் மனைவி செந்தாமரையுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். திருமணமாகி விட்ட மகன்கள் இருவரும் சென்னை, பெங்களூருவிலும், மகள் அமெரிக்காவிலும் செட்டிலாகி விட்டனர்.

இதனால் பண்ணை வீட்டில் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினர் மட்டும் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே போர்டிகோவில் சண்முகவேல் அமர்ந்திருக்க, செந்தாமரை வீட்டிற்குள் இருந்தார்.
அப்போது முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் ஒருவன் திடீரென சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கினான்.

இதனால் கொள்ளையனின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்று அலறினார். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியில் ஓடி வந்தார் மனைவி செந்தாமரை. கணவரை கொள்ளையன் கொல்ல முயன்றதைப் பார்த்ததும், அடுத்த விநாடியே அவர் செய்த துணிச்சலான காரியம் தான் ஹைலைட்.

வீட்டு வாசலில் கிடந்த செருப்புகளை எடுத்து முகமூடி கொள்ளையன் மீது சரமாரியாக வீசினார் செந்தாமரை. அதற்குள் மற்றொரு முகமூடி கொள்ளையன் கையில் அரிவாளுடன் அங்கே பிரவேசிக்க அவனையும் செருப்பால் வீசியடிக்கிறார் செந்தாமரை.இதில் கொள்ளையர்கள் இருவரும் நிலை குலைய , இந்த களேபாரத்தில் சுதாரித்த சண்முகவேல் கொள்ளையன் பிடியிருந்து விடுபடுகிறார்.

அவரும் ஆவேசமாக சேர்களை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசி எறிகிறார். சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினர் வீராவேசமாகி செருப்பு, பிளாஸ்டிக் சேர், உடைந்த கட்டைகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசுகின்றனர்.

இருவரின் வீராவேசத் தாக்குதலால் நிலை குலைந்த முகமூடி கொள்ளையர்கள் இருவரும் பின் வாங்குகின்றனர். விட்டால் போதுமடா சாமீ.. என செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அவருடைய கையிலும் அரிவாளால் லேசாக கீறிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதன் பின்னர் போலீசாருக்கு சண்முகவேல் தகவல் தெரிவிக்க, போலீசார் வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனையிட்டனர். அதில் கொள்ளையர்களுடன் சண்முகவேல் - செந்தாமரை தம்பதி போராடும் காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருந்தது தெரிய வந்தது.

இந்த சிசிடிவி கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வயதான காலத்திலும் நெல்லை சீமைக்கே உரித்தான வீராவேசத்துடன் கொள்ளையரை எதிர்த்து துணிச்சல் போராட்டம் நடத்திய சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினருக்கு பாராட்டுகள் மலைபோல் குவிந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் இந்த வீரத் தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையே கொள்ளையில் ஈடுபட முயன்ற முகமூடி ஆசாமிகள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் தான் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நெல்லை முன்னாள் மேயரை கொலை செய்தது ஏன்?- திமுக பெண் பிரமுகர் மகன் பரபரப்பு வாக்குமூலம்

You'r reading அரிவாளுடன் வந்த கொள்ளையரை செருப்பு .. சேர்.. கட்டைகளால் விரட்டியடித்த வீரத் தம்பதி .. குவியும் பாராட்டுகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி ; 137 நாட்களுக்கு நீர் கிடைக்கும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்