ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா.. பணிமாற்றத்தால் வருத்தம்?

Madras High Court Chief Justice VK Tahilramani Set To Quit Over Transfer

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமணி நியமிக்கப்பட்டார். மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவரையும் சேர்த்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக 2 பெண் நீதிபதிகள்தான் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம்(ஆக.) 28ம் தேதியன்று இவரை மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், அங்குள்ள தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்து, சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவே, கொலிஜியம் என்று அழைக்கப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் நிர்வாகக் காரணங்களுக்காக தலைமை நீதிபதி தஹில்ரமணியை மாற்றுவதாக கொலிஜியம் உத்தரவில் கூறப்பட்டது. இதையடுத்து, தனது பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்யுமாறு கொலிஜியத்திற்கு தலைமை நீதிபதி தஹில்ரமணி கோரிக்கைக் கடிதம் அனுப்பினார். ஆனால், அதை நிராகரித்த கொலிஜியம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது முந்தைய உத்தரவை உறுதி செய்தது.

சென்னை, மும்பை, கொல்கத்தா ஐகோர்ட்டுகள், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. மிகப்பெரிய மற்றும் பாரம்பரியமான இந்த நீதிமன்றங்களை சார்ட்டர்டு ஐகோர்ட் என்று சொல்வார்கள். இதில் பணியாற்றுவதே பெருமையாக கருதப்படும். எனவே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து விட்டு, மேகாலயா போன்ற சிறிய ஐகோர்ட்டுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதை விரும்பாமல் தஹில் ரமணி ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ராஜினமா குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் தலைமை நீதிபதி கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

You'r reading ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா.. பணிமாற்றத்தால் வருத்தம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திராவுக்கு ரூ.6000 கோடி கடன் தர என்.டி.பி. வங்கி ஒப்புதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்