பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஓ.பி.எஸ். சகோதரருக்கு தடை.. மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

madurai highcourt bench restrained ops brother o.raja and 17 members to function in theni dist. milk co.operative society council

தேனி மாவட்ட பால் கூட்டுறவுச் சங்கத் தலைவராக ஓ.பி.எஸ் சகோதரர் ராஜா செயல்படுவதற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.

சமீபத்தில், தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு ரிட்மனு தாக்கல் செய்தார்.

அதில், நான் பழனிச்செட்டிப்பட்டி பால் உற்பத்தியாளர் தொடக்கக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தேன். ஆகஸ்ட் 22ம் தேதி, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தனியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பிரிக்கப்பட்ட போது, 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் 13 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால், திடீரென 17 உறுப்பினர்கள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக அறிவித்து, அவர்கள் செப்டம்பர் 2ம் தேதி பதவியேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தலைவராக உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பலரும் அதிமுகவினர் என்பதைத் தவிர உண்மையான கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அல்ல. எனவே தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 17 உறுப்பினர்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு இன்று(செப்.12) நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது 17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானது எனவும், அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இவ்வழக்கில் பால்வளக் கூட்டுறவுத் துறை பதிவாளர், மாவட்டக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஓ.ராஜா உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

You'r reading பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஓ.பி.எஸ். சகோதரருக்கு தடை.. மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.. தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்