பேனர் விபத்துகளுக்கு யார் காரணம்? ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம்..

The main reason for banner accidents is the lethargic act of authorities : High court

சென்னையில் பேனர்கள் சரிந்து விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் காரணம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இப்படி பேனர்கள் வைப்பது தொடர்கிறது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ(23). சாப்ட்வேர் இன்ஜினீயரான சுபஸ்ரீ, கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலையில் வேலை முடிந்ததும் அவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமண விழாவுக்கு வரும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதற்காக ரேடியல் சாலையின் இருபுறங்களிலும் பெரிய பேனர்களை வைத்திருந்தனர்.

அந்த சாலையில் சுபஸ்ரீ சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது. அவர் வண்டியுடன் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது வேகமாக வந்த லாரியில் அவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை போலீசார் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு எடுத்து விசாரிக்க வேண்டுமென்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. அனைத்து அரசியல்கட்சிகளும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி வருகின்றன.

இப்படி பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தனமே முக்கிய காரணம். விதிகளை மீறி பேனர் வைப்பது, அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது எல்லாம் அரசியலாக பார்க்கப்படுகின்றன. இது போன்ற விபத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு கொடுத்து விட்டு, உத்தரவை மீண்டும் மதிக்காமல் செல்கின்றனர். சென்னையில் உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும் என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது போன்று, ஐகோர்ட் பல முறை உத்தரவு பிறப்பித்தும், டிராபிக் ராமசாமி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினாலும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெரிய பேனர்களை வைத்து கொண்டே இருக்கிறார்கள். பேனர் அச்சடித்தவர்களையும், வைத்தவர்களையும் தண்டிப்பதை விட்டுவிட்டு, யாருக்காக வைக்கப்படுகிறதோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதன்பின் எந்த அரசியல் கட்சிப் பிரமுகரும் தனக்கு பேனர் வைக்க விடாமல் பார்த்து கொள்வார்கள் என்பது நிச்சயம்.

You'r reading பேனர் விபத்துகளுக்கு யார் காரணம்? ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பரூக், உமர் அப்துல்லாவை சந்திக்க 2 எம்.பி.க்களுக்கு அனுமதி.. காஷ்மீர் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்