மோடி நாளை சென்னை வருகை.. ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

P,M.Modi to visit chennai tommorow and participate I.I.T convocation

பிரதமர் மோடி நாளை(செப்.30) சென்னை வருகிறார். ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

அமெரிக்காவில் ஒரு வாரகால பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு பிரதமர் மோடி நேற்றிரவு(செப்.28) நாடு திரும்பினார். ஐ.நா.வில் இந்தியாவின் சாதனைகளை குறிப்பிட்டு, உலக நாடுகளின் ஆதரவை பெற்று திரும்பிய அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி நாளை(செப்.30) சென்னைக்கு வருகிறார். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாளை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் என்ற தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் காலை 9.15 மணிக்கு தரையிறங்கும். அங்கிருந்து ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்திற்கு செல்கிறார். அங்கு காலை 9.30 மணிக்கு ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், இணையமைச்சர் சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே, சிங்கப்பூர் நாட்டின் கல்வி அமைச்சர் ஒங்க் யெ குங் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதன்பின், அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில்முனைவோருக்கான கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து காலை 11.40 மணிக்கு ஐ.ஐ.டி. வளாகத்தில் 56–வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறும் மாணவர்கள் செயல்பாட்டு அரங்கத்துக்கு பிரதமர் செல்கிறார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் அவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

You'r reading மோடி நாளை சென்னை வருகை.. ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜக பிரமுகர் கொலையில் தேடப்பட்ட ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக் கொலை.. காஷ்மீரில் வீரர் ஒருவரும் பலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்