நரேந்திர மோடி ஜின்பிங் வருகை.. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாமல்லபுரத்தில் வரலாற்று சந்திப்பு

PM Modi, Xi Jinping look to refresh India-China ties at seaside summit

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

சீன அதிபர் ஜின்பிங் அந்நாட்டு விமானம் மூலம் இன்று(அக்.11) பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். அவருடன் 200 பேர் கொண்ட குழுவினரும் வருகிறார்கள். விமான நிலையத்தில் அதிபர் ஜின்பிங்கை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள். கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

பின்னர், கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கும் ஜின்பிங், மாலை 4 மணிக்கு அங்கிருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் செல்கிறார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து அவர் ஹெலிகாப்டர் மூலமாக மாமல்லபுரத்திற்கு செல்கிறார். கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் என்ற நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார்.

இதன்பின், மாமல்லபுரத்திற்கு மாலையில் வந்து சேரும் சீன அதிபர் ஜின்பிங்கை மோடி வரவேற்கிறார். இருவரும் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசிக்கின்றனர். பின்னர், இருந்து நடந்தபடியே கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவற்றை பார்வையிடுகின்றனர். பின்னர் காரில் ஏறிச் சென்று ஐந்துரதம், கடற்கரைக் கோவில் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர்.

கடற்கரைக் கோவில் அருகே குண்டு துளைக்காத அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பின்னர், அருகில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு அரங்கத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கின்றனர். இரவு விருந்து முடிந்த பின்னர், ஜின்பிங்க் சென்னையில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலுக்கு திரும்புகிறார். மீண்டும் நாளை காலை சென்னையில் இருந்து புறப்படும் ஜின்பிங்க், கோவளத்தில் பிரதமர் மோடி தங்கியிருக்கும் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

அதன்பின், இரு நாட்டு குழுவினரும் சந்தித்து பேசுகின்றனர். இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடிந்ததும், இருவரும் சென்னை திரும்புகின்றனர். சீன அதிபர் ஜின்பிங், நேபாளத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அதன்பிறகு, பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இரு பெரும் தலைவர்கள் வருகையையொட்டி, சென்னை முதல் மகாபலிபுரம் வரை சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், ஐ.டி.சி. ஓட்டல் மற்றும் மாமல்லபுரம் வரை செல்லும் கடற்கரைச் சாலை, மாமல்லபுரம், கோவளம் என்று எல்லா பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக பல மாவட்டங்களில் இருந்து 2 நாட்களுக்கு முன்பே போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைதிகளை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லும் பணி உள்பட காவல்துறையினரின் பல பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை முதல் மாமல்லபுரம் வரை இருபெரும் தலவைர்களையும் வரவேற்கும் வகையில் பல்வேறு அலங்கார வளைவுகளும், சுவர் ஓவியங்கள் உள்ளிட்டவையும் செய்யப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளது.

You'r reading நரேந்திர மோடி ஜின்பிங் வருகை.. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாமல்லபுரத்தில் வரலாற்று சந்திப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசுரன் ஒரு அலசல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்