நளினி உள்பட 7 பேர் விடுதலைக்கு கவர்னர் எதிர்ப்பு.. அரசு கோரிக்கை நிராகரிப்பு?

TamilNadu Governor Banwarilal Purohit against freeing seven Rajiv case convicts

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அவருடன் 15க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் கொலை செய்தது என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த தடா சட்ட சிறப்பு நீதிமன்றம், கைது செய்யப்பட்ட நளினி உள்பட 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர், சுப்ரீம் கோர்ட் அப்பீலில் நளினி, முருகன்,பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இவர்கள் ஆயுள்தண்டனை காலத்தையும் தாண்டி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரப்பட்டது.

இதற்காக பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இறுதியில்,தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்ததால், இது தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கடந்த ஆண்டு செப்டம்பரில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் இது வரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், ஏழுபேரின் விடுதலைக்கு கவர்னர் புரோகித் எதிர்ப்பாக உள்ளதாக இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. இதை அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. எனினும், கவர்னர் எழுத்துப்பூர்வமாக தனது முடிவை தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சில நாட்களில், ஏழு பேரின் விடுதலைக்கு மறுப்பு தெரிவிக்கும் முடிவை வெளியிடலாம் எனக் கூறப்பட்டு்ள்ளது.

நாம் தமிழர் சீமான் சமீபத்தில், ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள்தான். இலங்கையில் எங்கள் இனத்தை அழித்ததால் அதை செய்தோம் என்று கூறியிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கவர்னரின் முடிவு குறித்த செய்தி வெளியாகி உள்ளதால், இதில் ஏதேனும் அரசியல் உள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

You'r reading நளினி உள்பட 7 பேர் விடுதலைக்கு கவர்னர் எதிர்ப்பு.. அரசு கோரிக்கை நிராகரிப்பு? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனிருத் அளித்த ரஜினியின் தர்பார் அப்டேட்.. நவம்பர் 7ல் மோஷன் போஸ்டர். தீம் மியூசிக் எப்போது?..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்