சசிகலா அதிமுகவில் சேரவே மாட்டார்.. டி.டி.வி.தினகரன் பேட்டி

Sasikala will not join admk, says TTV Dinakaran

சசிகலா ஒரு காலத்திலும் அதிமுகவில் சேரவே மாட்டார் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகளின்படி தண்டனை குறைக்கப்பட உள்ளதாகவும், அவர் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் விடுதலையாவார் என்றும் செய்திகள் வெளியாயின. அதை கர்நாடக சிறைத் துறை டிஜிபி மறுத்துள்ளார்.

எனினும், சசிகலா விடுதலை குறித்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிறையில் இருந்து சின்னம்மா விரைவில் வெளிவர வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட விருப்பம். அவர் வெளியே வந்த பிறகு வீட்டில் இருந்தாலும் அதிமுக ஆட்சிக்குத்தான் துணையாக இருப்பார் என்று சொன்னார். அதே போல், சசிகலா திரும்பி வந்தால் அவரை சேர்ப்பது குறித்து அதிமுக நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்நிலையில், மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே மாட்டார்கள். அப்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் அதில் அ.ம.மு.க. கண்டிப்பாக போட்டியிடும்.

அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் ஏரிகளை தூர்வாருவதாக சொல்கிறார்கள். ஆனால், அந்தப் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை. தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆற்றோடு போய் கடலில் கலந்து விட்டது.

எடப்பாடி அரசு தற்போது சினிமா துறையை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எப்போது வெளியில் வந்தாலும் அதிமுகவில் ஒருபோதும் சேர மாட்டார்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

You'r reading சசிகலா அதிமுகவில் சேரவே மாட்டார்.. டி.டி.வி.தினகரன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜார்கண்ட், டெல்லி தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும்.. ஜவடேகர் பேட்டி.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்