அதிமுக கொடிக்கம்பம் சரிந்து பெண் காயம்.. ஸ்டாலின் கண்டனம்

stalin condemns admk for the flagpost fell accident

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், வாகன விபத்துக்குள்ளான பெண் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளைத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று(நவ.11) காலை அவர் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் போயிருக்கிறார். கோல்டுவின்ஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த அதிமுக கட்சிக் கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. தன்மீது அந்த கம்பம் விழுந்து விடாமல் இருக்க அனுராதா பிரேக் போடவும், வண்டியுடன் சறுக்கி கீழே விழுந்து விட்டார். அப்போது அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. தற்போது, தனியார் மருத்துவமனையில் அனுராதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கால்களில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அதிமுக பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் தாமரை இல்லத் திருமணம் கடந்த 10ம்தேதி நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. கட்சி கொடி கம்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு கம்பம் சரியாக கட்டப்படாமல் இருந்ததால், சரிந்து விழுந்து விட்டது. அதனால் அனுராதா விபத்துக்குள்ளாகி விட்டார்என்றார்.

சென்னையில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். அது மாநிலம் முழுவதும் பலத்த கண்டனக் குரல்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவையில் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின், ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? என்று கேட்டிருக்கிறார்.

You'r reading அதிமுக கொடிக்கம்பம் சரிந்து பெண் காயம்.. ஸ்டாலின் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துப்பாக்கிகளுடன் புதுமணத் தம்பதி.. நாகலாந்தில் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்