தமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் தொழிலதிபர்கள் வருகை.. முதல்வருடன் சந்திப்பு.

Dubai industrialists meeting with Edappadi Palanisamy

தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ள துபாய் வாழ் இந்திய தொழிலதிபர்கள் நேற்று சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடந்த மாதம் அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டனர். அப்போது ரூ.8,835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை கொண்டு வரும் வகையில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதன்படி அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

துபாயில் இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் அதிபர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில் 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 10,800 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ள துபாய் தொழில் அதிபர்கள் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது முதல்வர் தலைமையில் தொழில் முனைவோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், துபாய் தொழில் அதிபர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஜெயின்ட் குழுமத்தின் தலைவர் சுதேஷ் அகர்வால், இந்திய வர்த்தக கண்காட்சி மையத்தின் இயக்குனர் ஸ்ரீபிரியா குமாரி, சன்னி குழுமத்தின் தலைவர் சன்னி குரியன், ஓசன் ரப்பர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.எம்.நூர்தீன், ப்ரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் முகேஷ் கோச்சார், காம்ரோ சர்வதேச நிறுவனத்தின் துணைத் தலைவர் வின்சென்ட் ஜோஸ் நீவ்ஸ், பி.ஏ.சி.இ. குழுமத்தின் தலைவர் பி.ஏ.இப்ராஹிம், இ.எஸ்.பி.ஏ. குழுமத்தின் பங்குதாரர் ஸ்வேதா பாலசுப்பிரமோணி, அப்பேரல் எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்சில் துணைத் தலைவர் ஏ.சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர். இக்குழுவினரிடம் உரையாடிய முதலமைச்சர், இந்நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நீரஜ்மிட்டல், தொழில் துறை சிறப்புச் செயலாளர் வி.அருண்ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர், துபாய் முதலீட்டாளர்கள் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபிரியா, செய்தியாளர்களிடம் கூறுகையில், பயோ டீசல், கடல் உணவுகள் ஏற்றுமதி, தளவாடங்கள் உற்பத்தி, சுகாதார துறைகளின் மூலம் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாயில் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவாக துபாய் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார்.

You'r reading தமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் தொழிலதிபர்கள் வருகை.. முதல்வருடன் சந்திப்பு. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்