ஸ்டாலின் வீட்டில் இருந்த ஓ.எம்.ஜி. சுனில் திடீர் விலகல்..

Sunil resigned from M.K.stalin promote team OMG

திமுக தலைவர் ஸ்டாலினை புரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஓ.எம்.ஜி. டீம் சுனில் நேற்று(நவ26) திடீரென வெளியேறினார்.

பிரதமர் மோடியின் முதல் முறை வெற்றிக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிேஷார் காரணம் என்று சொல்வார்கள். பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி என்று பலருக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தது. இதன்பின், பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கியப் பொறுப்பிலேயே நியமிக்கப்பட்டார்.

இந்த ஐபேக் நிறுவனத்தில் பணியாற்றிய தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுனில், கடந்த 2015ம் ஆண்டில் திமுகவுக்கு தேர்தல் வியூகம் அமைப்பதற்காக வந்தார். சுனிலும், அவருடன் ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் டீமில் இருந்த தினேஷ் சேர்ந்து ஓ.எம்.ஜி என்ற கார்ப்பரேட் நிறுவனத்தை துவக்கினர். அதில் ஒரு புதிய டீமை உருவாக்கி, ஸ்டாலினை புரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுனில் மற்றும் தினேஷை ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் தான் அழைத்து வந்தார்.

ஓ.எம்.ஜி. என்றால் ஒன்மேன் குரூப் என சொல்கிறார்கள். இந்த ஓ.எம்.ஜி முடிவின்படியே திமுக தலைவர் ஸ்டாலின் முதன் முதலில் நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சைக்கிளில் செல்வது, சாலையோர டீக்கடையில் டீ குடிப்பது போன்ற ஐடியாக்கள் எல்லாம் அந்த டீம் சொன்னவைதான். இதை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட கிண்டலடித்தன.

இதற்கு பிறகு கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது கட்சிக்காரர்கள் சிலரிடம் இந்த டீமில் இருப்பவர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பற்றி விசாரிக்கப்பட்டு டீமில் இருந்து பலர் ஒரே நாளில் அனுப்பப்பட்டனர்.

ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஓ.எம்.ஜி. சிறப்பாக செயல்பட்டதாக பேசப்பட்டது. அதேசமயம், கட்சியில் பழம் தின்று கொட்டை போட்ட மா.செ.க்கள், இந்த டீமின் அதிகாரத்தைப் பார்த்து மிரண்டனர். அதனால், அவர்களும் நீண்ட நாட்களாக அந்த டீமை கடுமையாக எதிர்த்தனர்.

கடைசியாக, சுனில், தினேஷ், தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி ஆசிரியராக பணியாற்றி விட்டு வந்த பார்த்திபன் உள்பட 12 பேர் மட்டும் ஓ.எம்.ஜி. டீமில் செயல்பட்டு வந்தனர். அவர்கள் ஸ்டாலின் செய்திகளை மீடியாக்களுக்கு அனுப்புவது மற்றும் மீடியாக்களில் ஸ்டாலின் பற்றி பேசப்படுபவை, திமுக மீதான விமர்சனங்கள், திமுகவினர் மீதான குற்றச்சாட்டுகள், குறிப்பாக திமுக புள்ளிகள் செய்யும் தவறுகள் குறித்த ரகசிய தகவல்களை சேகரித்து ஸ்டாலினிடம் கொடுக்கும் வேலைகளை செய்து வந்தனர்.

ஸ்டாலின் வீட்டு காம்பவுண்டுக்குள் அவர்களுக்கு தனி அலுவலகமே செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று திடீரென சுனில் விலகிச் சென்று விட்டார். இது பற்றி விசாரித்த போது, அவர் ஸ்டாலின் வீட்டில் இருந்து வெளியேறி விட்டது உண்மை என்று தெரிய வந்தது. ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் ஏற்பட்ட திடீர் மோதலே காரணம் என்று ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால், உதயநிதி ஸ்டாலினும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.

இன்னொரு புறம், பிரசாந்த் கிஷோரே வரப் போகிறார். அவர் தலைமையில்தான் ஓ.எம்.ஜி, வரும் 2021ம் ஆண்டு தேர்தலை சந்திக்கப் போகிறது என்கின்றனர். பிரசாந்த் கிஷோருக்கும், சுனிலுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால்தான் சுனில் முன்கூட்டியே பெட்டியை கட்டி விட்டார் என்றும் பேசப்படுகிறது.

You'r reading ஸ்டாலின் வீட்டில் இருந்த ஓ.எம்.ஜி. சுனில் திடீர் விலகல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பி.எஸ்.எல்.வி-சி47 வெற்றி.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்