ஊரக உள்ளாட்சிகளுக்கு டிச.27, 30 தேதிகளில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Elections rural local bodies date announced by state Election commission

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. இடஒதுக்கீடு, மறுவரையறை பிரச்னைகள் காரணமாக தேர்தல் நடத்துவதில் பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று(டிச.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:`

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பாணை(நோட்டிபிகேஷன்) வரும் 6ம் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும். டிச.13ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும். மனுக்கள் பரிசீலனை டிச.16ம் தேதி நடக்கும். டிச.18 மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு அடிப்படையில் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேரும், 2-ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சுயேச்சை சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி நடைபெறும்.

வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள், கிராம சபை உறுப்பினர்கள் ஜனவரி 6ம் தேதி பதவியேற்பார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் ஆகியவற்றுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடத்தப்படும்.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

You'r reading ஊரக உள்ளாட்சிகளுக்கு டிச.27, 30 தேதிகளில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து 15 பேர் பலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்