அமைச்சர் அன்பழகனிடம் ஆளுநர் புரோகித் விசாரணை.. போட்டு கொடுத்த துணைவேந்தர்...

Minister Anbalagan quarrel with V.C. Surappa infront of Governor

அண்ணா பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் அன்பழகனை கவர்னரிடம் போட்டு கொடுத்தார் துணைவேந்தர் சூரப்பா. இந்த சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 40வது பட்டமளிப்பு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நேற்று(டிச.3) காலை நடந்தது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஆராய்ச்சிப் படிப்பு முடித்த 1180 பேர் பி.எச்.டி பட்டம் பெற்றனர். இளநிலை பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற 39 மாணவிகள் உட்பட 71 பேருக்கு தங்க பதக்கமும் வழங்கப்பட்டது.

விழாவில் துணைவேந்தர் சூரப்பா பேசுகையில், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மேன்மைமிகு சிறப்பு உயர்கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை வழங்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராக உள்ளது. தமிழக அரசு இதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யாமல் தனது ஒப்புதல் கடிதத்தை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனை மறைமுகமாக போட்டுக் கொடுத்தார். இதில் அமைச்சர் அன்பழகன் டென்ஷன் ஆகி விட்டார். அதன்பிறகு பரபரப்பான காட்சிகள் நடந்தேறியது.

துணைவேந்தர் பேசியதைக் கேட்ட ஆளுநர் புரோகித், பக்கத்தில் இருந்த அமைச்சர் அன்பழகனிடம் துணைவேந்தர் பேச்சு குறித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பிரச்னை என்னவென்றும் விசாரித்தார். அமைச்சர் சில காரணங்களை கூறி சமாளித்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியே வந்த அமைச்சரிடம், ஆளுநர் விசாரித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர், அப்படி அறிவிப்பதால் இட ஒதுக்கீடு பாதிக்காது என்று மத்திய அரசு கடிதம் அளிக்கும் வரை நாங்கள் ஒப்புதல் கடிதம் வழங்க மாட்டோம் என்று தெரிவித்து விட்டு, வேகமாக நடையை கட்டினார்.

அமைச்சருக்கும், துணைவேந்தருக்கு இடையே நடக்கும் பனிப்போர் காரணமாக, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தற்போது வரை கிடைக்காமல் இடியாப்பச் சிக்கலாக மாறியிருக்கிறது என்று நடுநிலையான அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் புலம்புகிறார்கள்.

You'r reading அமைச்சர் அன்பழகனிடம் ஆளுநர் புரோகித் விசாரணை.. போட்டு கொடுத்த துணைவேந்தர்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்