கலைஞர் மறைந்த அன்றே திமுகவை விட்டு வெளியேற சிந்தித்தேன்.. கார்ப்பரேட் கம்பெனி திமுக.. பழ.கருப்பையா விலகல்

Pala karuppaiah quit from Dmk after meet with Stalin

திமுகவில் இருந்து எழுத்தாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா விலகியுள்ளார்.

தமிழ் மொழி ஆர்வலரும், தமிழினப் பற்று உடையவருமான பழ.கருப்பையா, நீண்ட காலம் அரசியலை வெளியே இருந்து விமர்சித்தவர். கடந்த 2010ம் ஆண்டில் அவர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுத்தார் ஜெயலலிதா.

தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வாக இருந்த பழ.கருப்பையா, கடந்த 2016ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து கொண்டே அக்கட்சியை கடுமையாக விமர்சித்தார். ஊழல் புரையோடி விட்டதாகவும், கமிஷன் கட்சியாகி விட்டதாகவும் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, அவர் மீது தாக்குதல் நடந்தது.

இதற்கு பிறகு தான் கடுமையாக விமர்சித்து வந்த கருணாநிதியின் அழைப்பை ஏற்று, திமுகவில் சேர்ந்தார். ஆனாலும், திமுகவில் இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் அவரால் மாற முடியவில்லை.

இந்நிலையில், பழ.கருப்பையா இன்று(டிச.12) ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கலைஞர் மறைந்த அன்றே திமுகவை விட்டு வெளியேற சிந்தித்தேன். பாஜக எதிர்ப்புணர், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிக் கொண்டே போய் விட்டது.

திமுகவின் நிகழ்கால நிகழ்வுகள், போக்குகள், சிந்தனை பாங்குகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போல கட்சியை நடத்தும் விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு, பணம் மட்டுமே எல்லாம் என கருதும் மனப்பான்மை இவையெல்லாம் என்னிடம் மனச்சலிப்பை உண்டாக்கியிருந்தன.

இவற்றோடு பொருந்தி போக முடியாத நிலையில் திமுகவை விட்டு ஒதுங்கிக் கொள்வது என்றும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வது என்றும் முடிவெடுத்தேன். நேரடியாக ஸ்டாலினை பார்த்து விடையும் பெற்றேன்.

ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலை பொதுவாழ்வில் அங்கமாக ஏற்பது, கட்சிக்குள்ளே கூட விமர்சிக்க முடியாதவாறு கட்சி விசுவாசம் என்னும் பெயரால் அவற்றை நிலைநாட்டுவது, இவையெல்லாம் எந்த வகையிலும் பொது வாழ்க்கைக்கு ஏற்புடையதல்ல.

மாநிலங்களை பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவத, இவையெல்லாம் மொழிவழி, இன உணர்வை சிதைக்கின்ற போக்குகளாகும். இதிலிலுள்ள ஆபத்தை திமுக சரியாக புரிந்து கொண்டிருக்கிறது என்று என்னால் கருத முடியவில்லை வெறும் ஒரு நாள் அறிக்கைகளோட இவையெல்லாம் முடிந்து விடுகின்றவை அல்ல.

கடந்த 50 ஆண்டுளாக ஊழலை, ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது. இதுவல்ல மாற்று அரசியல் என்னும் கருத்தே என்னுடைய விலகலுக்கு காரணம்.
இவ்வாறு பழ.கருப்பையா கூறியுள்ளார்.

You'r reading கலைஞர் மறைந்த அன்றே திமுகவை விட்டு வெளியேற சிந்தித்தேன்.. கார்ப்பரேட் கம்பெனி திமுக.. பழ.கருப்பையா விலகல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக அசாம், திரிபுராவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்