ஓய்வு பெற்றாலும் சிக்கல்தான்.. ஊழல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..

IAS officers involving admk govt. scandals will not be let off, says M.K.stalin.

அமைச்சர் வேலுமணியின் ஊழல்களுக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து வி.ஆர். எனப்படும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இப்போது இல்லையா?

அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்துப் போட்டிருக்கிறதா? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன.

உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சரின் வலது கரமாகவும், இடது கரமாகவும் திகழ்பவர் என்பது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் நன்கு அறிந்ததே!

அதனால்தான் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை, திட்டமிட்டுக் கிடப்பில் போடுவதோடு மட்டுமின்றி, அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் கைகட்டி நின்று கப்பம் வசூல் செய்யும் பணியை கச்சிதமாய்ச் செய்து வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது.

குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் எல்லாம் வேலுமணியின் ஊழலுக்கு, விரும்பியோ விரும்பாமலோ துணை போவது அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, தூய்மையான, நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்.
உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும்.

அது போன்ற ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading ஓய்வு பெற்றாலும் சிக்கல்தான்.. ஊழல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரேப் இன் இந்தியா.. ரேப் கேபிடல் டெல்லி.. மன்னிப்பு கேட்பது யார்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்