ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சம் பேர் மனு தாக்கல்..

Morethan 2 lakhs filed nominations in localbody elections

வரும் 27, 30 தேதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2016ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொகுதி வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. கடைசியாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டது.

ஆனாலும், ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு மட்டும் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. கடந்த 14ம் தேதி வரையில் மட்டும் 1 லட்சத்து 65,659 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் கிடையாது. கடைசி நாளான நேற்று அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் போட்டி போட்டு மனு தாக்கல் செய்தனர். கூட்டம் அலைமோதியதால் மாலை 5 மணிக்கு முடிய வேண்டிய வேட்புமனு தாக்கல் இரவு வரை நீடித்தது.

இதனால், மனு தாக்கல் செய்தவர்களின் இறுதி எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுக்கள் இன்று அந்தந்த தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் பரிசீலிக்கப்படுகின்றன. வரும் 19ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்.

You'r reading ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சம் பேர் மனு தாக்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது.. வதந்திகளை நம்பக் கூடாது.. பிரதமர் மோடி வேண்டுகோள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்