வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும்.. ரஜினியை கிண்டலடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

வன்முறை கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதில் பதிவு போட்டிருக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்களை மட்டும் ஒதுக்கி வைத்து, மத அடிப்படையில் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

போராட்டங்களுக்கு ஆதரவாக இந்தி, தமிழ், மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என்று திரையுலகினர் பலரும் கருத்து கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டுநலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், தலைவர் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும் என்று கூறியுள்ளார்.

வசதியான, வயதான என்று ரஜினியை இளம்நடிகர் உதயநிதி கிண்டலடித்திருக்கிறார். ஏற்கனவே இன்னொரு இளம் நடிகர் சித்தார்த்தும் ட்விட்டரில் மறைமுகமாக ரஜினியை தாக்கியிருந்தார்.

அதாவது, மோடியையும், அமித்ஷாவையும் கிருஷ்ணரும், அர்ஜுனரும் போல இருப்பதாக ரஜினி கூறியிருந்தார். அதற்கு சித்தார்த், அவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல. சகுனியும், துரியோதனனும் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும்.. ரஜினியை கிண்டலடிக்கும் உதயநிதி ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜார்கண்ட் தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்