குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் தோல்வி.. அன்வர்ராஜா ஒப்புதல்

Citizenship Act Failure to support says Anwarraja accepted

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால்தான் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்று அன்வர்ராஜா கூறியுள்ளார்.


ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவின் மகள் ரவியத்துல் அதவியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜீவானந்தத்தின் மனைவி சுப்புலட்சுமி போட்டியிட்டார். இவர்களில் சுப்புலட்சுமி 2310 வாக்குகளும், அதவியா 1062 வாக்குகளும் பெற்றனர். அந்த ஒன்றியத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தும் அதவியா, திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். இதே போல், இன்னொரு ஒன்றிய வார்டில் போட்டியிட்ட அன்வர்ராஜாவின் மகனும் தோல்வியுற்றார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அன்வர்ராஜா, தொலைபேசியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிறுபான்மை மக்கள் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால், உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமலாகும் என்ற அச்சம், சிறுபான்மையினர் மத்தியில் உள்ளது.
அதனால்தான், இந்த விஷயத்தில் அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று ஏற்கனவே தலைமையிடம் வலியுறுத்தினேன். தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாமில் மட்டுமே அமல்படுத்தப் போவதாக பாஜக கூறியதால், நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.



You'r reading குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் தோல்வி.. அன்வர்ராஜா ஒப்புதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்ட அமெரிக்கா-ஈரானில் கொந்தளிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்