முரசொலி வைத்திருப்பவன் திமுககாரன்.துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி.ரஜினியின் சர்ச்சை பேச்சு.

Rajini slams Dmk daily Murasoli in Thuklak function.

முரசொலி வைத்திருப்பவன் திமுககாரர், துக்ளக் வைத்திருப்பவர் அறிவாளி என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழா ஜனவரி 14ம் தேதி மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழா மலரை வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த், முதல் மலரை பெற்றுக் கொண்டார். விழாவில் ரஜினி பேசும் போது, திமுகவை வம்பிழுக்கும் வகையில் பேசினார். அவர் பேசியதாவது:துக்ளக் பத்திரிகையை சோவுக்கு பிறகு குருமூர்த்தி சிறப்பாக நடத்தி வருகிறார். நமக்கு பிறகு யார் இந்த பத்திரிகையை நடத்துவார் என்று சோ கவலைப்பட்டார். அப்போது அவர் குருமூர்த்தியிடம் கேட்டார். குருமூர்த்தி அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும் அவரை கட்டாயப்படுத்தி இந்த பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அவர் சிறப்பாக நடத்தி வருகிறார்.


ஒருவர் கையில் முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லி விடலாம். அதே போல், துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லி விடலாம். துக்ளக் பத்திகை வைத்திருந்ததால் அவர் அறிவாளியானாரா? அல்லது துக்ளக் படித்ததால் அறிவாளியானாரா? என்று தெரியாது.சோ இரண்டு பேர்களால்தான் பெரிய ஆளாக ஆனார். ஒருவர் பக்தவச்சலம். மற்றொருவர் கலைஞர். காங்கிரஸ் ஆட்சியில் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த போது சோ சாதாரண நாடக நடிகராக இருந்தார். அவரது விமர்சனத்தை பக்தவச்சலம் எதிர்த்ததால், சோ பிரபலம் ஆனார். அதற்கு பிறகு கலைஞர் அவரை எதிர்த்ததால் அவர் இன்னும் பிரபலமானார்.


1971ம் ஆண்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு, பெரியார் ஊர்வலம் நடத்தினார். அந்த புகைப்படத்தை துக்ளக் பத்திரிகையில் சோ வெளியிட்டார். அதனால், அரசுக்கு கெட்ட பெயர் வந்ததால் அந்த பத்திரிகையை வெளியிட விடாமல் கலைஞர் தடை செய்தார். ஆனால், சோ அந்த பத்திரிகையை மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். அது பிளாக்கில் விற்பனையானது.அதே போல, இந்திராகாந்தி காலத்தில் எமர்ஜென்ஸி நடந்த போது சோ, அதை கருப்பு நாள் என்று அச்சடித்து வெளியிட்டார். எமர்ஜென்ஸிக்கு எதிராக சோ பேசியபோது இந்தியா முழுவதும் பிரபலமானார்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் தினம்தினம் கவலைகள் வருகின்றன. கவலைகளை நிரந்தரமாக்கிக் கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமாக்கிகொண்டால் நீ அறிவாளி.இவ்வாறு ரஜினி பேசினார்.


திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சில மாதங்களுக்கு ரஜினியை கடுமையாக தாக்கி கட்டுரை வெளியானது. அதற்கு பிறகு, ஸ்டாலின் தலையிட்டதால் அதற்கு மறுநாளே வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், முரசொலியை திமுககாரர் மட்டுமே படிப்பார்கள் என்று மட்டம் தட்டும் வகையில் ரஜினி பேசியது திமுகவினருக்கு கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கிறது. அதனால், சமூக ஊடகங்களில் ரஜினிக்கு எதிராக பலவாறாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.



You'r reading முரசொலி வைத்திருப்பவன் திமுககாரன்.துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி.ரஜினியின் சர்ச்சை பேச்சு. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆணவ படுகொலை பட இயக்குனருக்கு அஜீத் வாழ்த்தா? பதறியடித்து மறுப்பு தெரிவித்த டைரக்டர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்