தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யுங்கள்.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த முறை தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆன்மீக மாநாடும் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே. ஆகம விதிகள் இந்தக் கோரிக்கைக்கு எதிராக இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!
சிவபெருமான் தமிழ்நாட்டில்தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அனைத்து நிகழ்வுகளிலும் தமிழிலேயே உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது தானே சரியான செயலாக இருக்க முடியும்?
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

You'r reading தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யுங்கள்.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டாலின் தலைவர் பதவியை துரைமுருகனுக்கு தருவாரா? ஜெயக்குமார் கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்