மெரினாவில் குடியரசு தினவிழா.. கவர்னர் தேசியக் கொடி ஏற்றினார்.. விருதுகளை முதல்வர் வழங்கினார்..

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

நாட்டின் 71வது குடியரசு தின விழா, டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக, பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சொனரோ கலந்து கொண்டார்.

தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். கடற்கரைச் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் சந்திர மோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜசேகரன், பண்ருட்டி காவல் ஆய்வாளர் பூங்கோதை, விழுப்புரம் மத்திய புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் அழகிரி, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்திபநாதன் ஆகியோர் பெற்று கொண்டனர்.

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது கோவை நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. 2வது பரிசு திண்டுக்கல் காவல் நிலையம், 3வது பரிசு தருமபுரி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. அதிக உற்பத்தியை ஈட்டிய விவசாயிகளுக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது, சென்னிமலை குன்னாங்காட்டுவலசை சேர்ந்த யுவக்குமாருக்கு வழங்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்ட நாகை தீயணைப்பு வாகன ஓட்டுநர் ராஜாவுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

You'r reading மெரினாவில் குடியரசு தினவிழா.. கவர்னர் தேசியக் கொடி ஏற்றினார்.. விருதுகளை முதல்வர் வழங்கினார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 17 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் தேசியக் கொடியுடன் இந்திய வீரர்கள் அணிவகுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்